Saturday, 7 March 2020

ரயிலும் குடும்பமும்


கடல், யானை, ரயில் மூன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ரயிலில் அந்த காலத்தில்  நீராவியால் ஓடிய இன்ஜின்களை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தாத்தா, சின்ன தாத்தா, பெரியப்பா, அப்பா என குடும்பத்தில் அனைவரும் ரயில்வே டிரைவராக பணி புரிந்ததாலும் அண்டை வீட்டு சிறுவயது நண்பர்களும் ரயில்வேயில் பணி புரிந்தவர்களின் பிள்ளைகளாக இருந்ததாலும் சிறுவயது விளையாட்டில் ரயில் ஓட்டும் விளையாட்டும் முக்கியமானது. வீட்டு கதவில்  இன்ஜினில் உள்ளது போல் கம்பு, குச்சியெல்லாம் கட்டி இன்ஜினில் உள்ள பாகங்களை கற்பனையாக செய்து ரயில் இன்ஜினை எப்படி ஓட்டுவார்களோ அப்படி சத்தம் கொடுத்துக்கொண்டே ஓட்டுவது பிடித்தமான விளையாட்டு.  அனைவருக்கும் அவர்அவர்கள்  அப்பாவிற்கு சாப்பாடு கொடுக்கும் போது இன்ஜீனில் ஏறிபார்த்த அனுபவம் இருக்கும்.  நான் ஓரு படி மேலே சென்று அப்பா இன்ஜினில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். உள்ளே நிற்க முடியாத அளவு வெப்பம். ஓடும் போது பரவாயில்லை. எப்படி இயக்கிறார்கள் என்பது எங்களுக்கு அத்துப்படி. ஒவ்வொறு ரயில் நிலையத்திலும் இன்ஜினில் தண்ணீர் பிடிக்க ஒரு கூட்டம் ரெடியாக நிற்கும். நின்றவுடன் அவர்களது குடங்களை நிரப்பி விட்டு அடுத்த நிலையத்திற்கு பயணம் தொடரும். இது மனிதபிமான அடிப்படையில் இன்ஜினில் பணிபுரிபவர்கள் செய்யக்கூடியது.  பிற்காலத்தில் அப்பாவே டீசல் இன்ஜினுக்கு மாறிய போது அந்த இன்ஜினில் எங்களுக்கு ஆர்வம் குறைந்து போனது.  இப்போது நீராவி இன்ஜின்களை நேரிலோ படத்தையோ பார்த்தால் மனது உற்சாகமாகி விடும். அது எங்களின்  ஜீன்களில் பதிந்து விட்டது.


Monday, 2 March 2020

ஓவியமே பொழுதாய்



வனத்துறையில் ஓய்வு பெற்ற பின்னர் நான் என் நேரத்தை செலவிட  தேர்ந்தெடுத்த அம்சங்களில் ஒன்று ஓவியம். முறையாக பயிலவில்லை என்றாலும் ஓவியம் வரைவதை குறிப்பாக அக்ரலிக், ஆயில் பெயிண்டிங் வரைவதில் அதிக ஆர்வம் காரணமாக பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து வாங்கி சேமித்த ஆயில் கலர், பிரஸ் போன்றவற்றுடன் அக்ரலிக் கலர்களையும் வாங்கி சேமித்து படம் வரைய ஆரம்பித்தேன். ஆயில் பெயிண்டினால் வரைந்த ஓவியங்கள். அதிகப்படியான ஆர்வத்தினால் ஒரளவு வரைய முடிந்தது. 
ஆயில் பெயிண்டில் வரைந்த முதல் விநாயகர்
சிங்க ராஜாவை ஆயில் பெயிண்டிங்கில் 

Pallet knife painting




புலிகளின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே

அக்ரலிக் பெயிண்ட் என்பது பேனாவில் எழுதுவது போல் உடனுக்குடன் பார்க்ககூடியது. ஆனால் திருத்தங்கள் செய்வது கடினம். முதலில் அக்ரலிக் பெயிண்டில் தான் ஒவியம் வரைய ஆரம்பித்தேன்.  
First painting in acrylic
Kerala mural painting
Kerala mural Krishna painting 



அக்ரலிக் ஆயில் பெயிண்டிங் இவற்றில் பல படங்களை வரைந்த பின்னர் 3D எபெக்டில் நானே சில முறைகளை பயன்படுத்தி சில படங்களை வரைந்தேன். நன்றாக இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள்.



Tuesday, 14 January 2020

மனம் கவர்ந்த ஒவியர்

Nick Sider. இவர்தான் நான் புலிகளை அதிகமாக ஒவியம் வரைய வனத்துறையில் பணியாற்றியது காரணம் என்றாலும் பின்னாளில் இவரை எனது முழு முதல் வழிகாட்டியாக எண்ணிக் கொண்டேன்.  இவர்  சிறிய வயதில் ஒவியத்தில் ஆர்வம் இருந்தாலும் அதை மனதுக்குள் புதைத்து வைத்து படிப்பை முடித்து பணிக்கு சென்றார். திடீரென இருபத்தி ஐந்து வயதில் வேலையை விட்டுவிட்டு ஒவியத்தின் நுணுக்கங்களை தனக்கு தானே கற்று ஒவியம் வரைய ஆரம்பித்த சுயம்பு ஒவியர்.
2020 ல் முதலில் வரைந்த புலி

இவருடைய சிறப்பு இவர் ஓவியங்களை பார்த்தால் புகைபடங்களை பார்த்தது போல் இருக்கும். அச்சு அசலாக நேரில் பார்த்தது போல் இருக்கும்

               அக்ரலிக் பெயிண்டினால் ஒவியம் தீட்டும் உலகம் வியக்கும் ஒவியர்  இவர். இவரை பின்பற்றி நான் புலிகளை வரைகிறேன். பத்து சதவீதம் கூட முன்னேற்றம் இல்லை. புலியை பார்த்து சுடு போட்டுக்கொண்ட பூனையை போல. இவரை அடுத்த முறை வெளிநாடு செல்லும் போது  நேரில் சந்திக்க ஆசை.

Wednesday, 23 October 2019

திருக்கோவில் தரிசனம் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன் சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்


திருநெல்வேலி மதுரை சாலையில் கங்கைகொண்டானில் அமைந்துள்ள சிவாலயத்தையும் விஷ்ணு ஆலயத்தையும் இன்று தரிசனம் செய்தேன். கடைசியாக இத்திருத்தலங்களை தரிசித்து  ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அப்போது அ /மி கைலாசநாதர் திருக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க பணிகள் துவங்கிய நேரம். 2017 ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் ஆலயம் சூரியனால் வழி பட்ட ஆலயம் என்றும் அது சிவனின் வலது கண்ணாகவும், திருக்குற்றாலநாதர் திருக்கோவில் சந்திரனால் வழி பட்ட ஆலயம் என்றும் அத்திருத்தலம் சிவனின் இடது கண்ணாகவும், கங்கைகொண்டான் திருகைலாசநாதர் ஆலயம் அக்னியால் வழிபட்ட தலம் என்றும் இது சிவனின் மூன்றாவது கண்ணாகவும் கருதப்படுகிறது. இம்மூன்று தலத்திற்கும் கும்பாபிஷேகம் செய்த அகஸ்திய முனிவர் தன் மனைவி யோகமுத்ராவுடன் தன்பொருணை என்றழைக்கப்பட்ட இன்றைய தாமிரபரணி ஆற்றின்கரையில் வசித்து வந்தார்.
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஆனந்தவல்லி அம்மன் இத்திருவூரில் பிறந்து சிவனையே நினைத்து உருகி சிவனுடன் ஸ்ரீரங்கபெருமாளையடைந்த ஆண்டாளை போல் சிவனுடன் கலந்தார் என அவ்வூர் சிவனடியார் சொல்லக்கேட்டேன். 

இத்திருக்கோவிலில் ராஜகோபுரம் அழகுடன் மிளிர்கிறது. ஸ்தல விருஷமான பழைய புளிய மரம் அடிபக்கசுற்று  18 அடியில்  காணப்படுகிறது. கோவிலின் மதில்சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.

            இவ்வூரிலுள்ள விஷ்ணு திருத்தலம் அருள்மிகு கள்ளர்பிரான் சன்னதி என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் 400-500 ஆண்டுக்கால பழமையானது. இவ்வூரை சேர்ந்து உயர் பதவியிலிருந்த அன்பர் ஒருவரது சீரிய முயற்சியால் இத்திருத்தலமும் சில ஆண்டுகளுக்கு முன் புணரமைக்கப்பட்டுள்ளது.

Monday, 24 December 2018

M R RADHA, The legendry actor


                எம்ஆர். ராதாவை சின்னத்திரையில் பலே பாண்டியா என்ற பழைய திரைப்படத்தில் பார்த்தேன். நினைவுகள் பின்னோக்கி. இப்பவுள்ள இளைய தலைமுறை எம்ஜிஆரையும், சிவாஜியையும் காமெடியாக பார்க்கும் அதே நேரம் எம்ஆர் ராதாவை சீரியஸாக பார்க்கிறது. சிவாஜியே ஆரம்ப கட்டத்தில் அவரது நாடக கம்பெனியில் நடித்தவர்தான். வெள்ளைக்காரன் இவர் நாடகத்தை அடிக்கடி தடை செய்வான். இவர் நாடகத்தின் பெயரை மாற்றி காட்சிகளை மாற்றி அதே நாடகத்தை மீண்டும் மக்களின் ஏக ஆதரவோடு நடத்தியவர்.  அதற்காக பல முறை சிறை சென்றவர். இவ்வளவுக்கும் அவர் பள்ளிகூடம் சென்று படித்தவரில்லை. 1975 நாட்டில் எமர்ஜென்ஸி நடக்கும் போது திருநெல்வேலி பொருட்காட்சியில் அவரது நாடகம் பார்த்தேன். பயம் துளி கூட இல்லாமல் எமர்ஜென்ஸியையும், நீதி துறையையும், அரசு நிர்வாகத்தையும் கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டார். இத்தனைக்கும் எம்ஜிஆரை சுட்ட வழக்கில் ஜெயிலில் இருந்து வந்த பிறகு நடந்த நிகழ்சி.
நாடக தடைச்சட்டம் உருவாக்கப் பட்டு நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு எம் ஆர் ராதாவிற்கு பிடித்த காமராசர் ஆட்சியில் மட்டும் ராதா 52 தடவைகள் கைது செய்யப் பட்டுள்ளார்.
லட்சுமி காந்தன் என்ற நாடகத்தை 760 முறை மேடையேற்றினார்.
1954 ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ரத்த கண்ணீர் திரைபடத்திற்கு அவர் பெற்ற சம்பளம் ஒன்றேகால் கோடி. நினைக்கவே பிரமிப்பாக இருக்கும். அப்போது 10 கிராம் தங்கத்தின் விலை 77 ரூபாய் மட்டுமே. எவ்வளவு பெரிய நடிகர் என்பது விளங்குவதற்காக குறிப்பிட்டேன்.

பெரியார், காமராசர், அண்ணா அனைவரும் அவரை நேசித்தார்கள். எம்ஜிஆர் என்ற மாபெரும் மாமனிதரை சுட்டவர். எம்ஜிஆரை சுட்டவர் இவரை தவிர யார் செய்திருந்தாலும் மக்கள் கல்லால் அடித்திருப்பார்கள். ஆனால் இவர் மீது துரும்பு கூட பட்டதில்லை. அண்ணா உட்பட எந்த தலைவரும் எம்ஜிஆரை சுட்டதற்கு கண்டனம் தெரிவித்ததாக கூட எனக்கு நினைவில்லை. நான் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறேன். 1967 தேர்தல் நடைபெற போகிறது. எங்கு பார்த்தாலும் குண்டடி பட்டு சிகிச்சை பெறும் எம்ஜிஆரின் போஸ்டர்கள். திமுக இந்த சம்பவத்தை காங்கிரஸீக்கு எதிராக ஒட்டுக்கேட்க பயன் படுத்தியதே அல்லாமல் எம்ஆர் ராதா பெயரைக் மறந்தும் கூட யாரும் உச்சரிக்க வில்லை. எம்ஆர் ராதா எம்ஜிஆரை சுட்ட பின்பும் மக்கள் செல்வாக்கு பெற்றவராகவே இருந்தார்.
எம்ஜிஆரை சுட்ட வழக்கில் பரோலில் வந்து திருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டில் தங்கியிருந்த எம்ஆர் ராதாவை பெருந்தலைவர் காமராசர் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுடன் குமரி அனந்தனும் திராவிட கழக பிரமுகர் சிதம்பரம் கிருஷ்ணசாமி ஆகியோரும் சென்றிருந்தனர். எம் ஜி ஆருக்கு நெருக்கமான நடிகர் எஸ் எஸ் ஆருக்கு ராதாவுடன் மிக நெருக்கம். அப்போது எம்ஆர்ராதாவை ஜெயிலில் சந்தித்தார். எம்ஜிஆர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வேறு எந்த நடிகரும் சந்திக்க வில்லை. எம்ஜிஆரை சுட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் தண்டனை நாலரை ஆண்டுகளாக குறைக்கப் பட்டு  1971 ல் விடுதலையானார். ராதாவின் வழக்கறிஞர்கள் அப்போது பிரபலமான வக்கீல்கலான மோகன் குமாரமங்கலம் மற்றும் வானாமலை ஆகியோர்.
         பின்னாளில் ஜெயிலுக்கு போய் வந்த பிறகு மனோரமா மகன் பூபதி திருமணத்தில் கலந்து கொள்கிறார்.  அதே திருமணத்திற்கு வந்த எம்ஜிஆர் இவர் வந்திருப்பதை கேள்விப்பட்டு எம்ஆர் ராதாவின் அருகில் சென்று அண்ணன் நல்லா இருக்கிறீங்களா? இவரும் பதிலுக்கு நல்லாயிருக்கிறேன்.  இதை இப்ப சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்.     
                ராதாவின் இறந்த நாளும் பெரியாரின் பிறந்த நாளும் ஒன்று. .  

Friday, 30 November 2018

நேர்மையின் சின்னம் திரு தேவதாஸ், கோட்ட வன அலுவலர்


நமது பயிற்சியில் ஆசிரியராக இருந்த திரு தேவதாஸ் அவர்களை பற்றி சொல்லாவிட்டால் நான் நல்ல மனிதனாக இருக்க முடியாது. திருமணமாகாதவர். நல்ல வகுப்பு எடுப்பவர். தகுதியுடையவர். அவர் பாடம் எடுத்த சர்வே, திரு  தங்கராஜ் சார் - வன விலங்கு, திரு G.T.ரங்கையன் -  வனச்சட்டம்  இந்த மூன்றுதான் சொல்லிக்கொடுத்தவுடன் எனக்கு புரிந்தது. மற்றதெல்லாம் தாமதமாக புரிந்தேன்.. அவரைப்பற்றி இப்படி அறிந்த நிலையில் என்னுடைய சரகர் திரு ஜெயபேரின்பகுமார் அவரைப்பற்றி அடிக்கடி சொல்ல கேட்ட நிலையில் நான் பணிபுரிந்த திருநெல்வேலி வனவிரிவாக்க கோட்டத்திற்கே வன விரிவாக்க அலுவலராக வந்தார். அப்போது வனவிரிவாக்க கோட்ட சரகர்களாக நானும் திரு ஜெயபேரின்பகுமார் இன்னும் இரண்டு பேர் பணிபுரிந்தோம். 24X7 நேரமும் வேலையை பற்றிய சிந்தனை. அப்பழுக்கற்ற ஒரு நேர்மையான, சதா வேலையை பற்றிய சிந்தனை கொண்ட மனிதர் வனத்துறையில் இருந்திருப்பார்களான்னு தெரியவில்லை.  தனீயார் நிலங்களில் மர வளர்ப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் வந்த நேரம். ஒரு சரகர் நட்டிய மரங்கள் நிறைய பட்டு போய் விட்டது. அந்த சரகரிடம் கேட்டால் சட்டம் பேசினார். தன்னுடைய சொந்த செலவில் அத்தனை செடிகளையும் இவர் மீண்டும் நட்டிக் கொடுத்தார். இது விஷயமாகவும் இன்னும் சில விஷயங்களுக்காகவும் அவரிடம்  மிகமிக வாக்குவாதம் செய்திருக்கிறேன். சரகர்கள் இப்படி  வேலை செய்கிறார்களேன்னு வருத்தப்பட்ட நிலையில் என்னுடைய சரகத்திற்கு கூட்டிப் போய் நடவு பணிகளை காட்டினேன். ரொம்ப சந்தோசமாகி நீயேண்டா முதலில் காட்டல. PCCF கூட்டிட்டு வந்திருப்பேனே என்று மகிழ்சியுடன் வருத்தப் பட்டு பிறகு கோவில்பட்டியில் சாப்பிட்டார். கருப்பட்டி மிட்டாய் வாங்கி கொடுத்தேன். அவருக்கு சுகர். இருந்தாலும் சாப்பிட்டார். மற்ற சரகம் போய் பார்த்து சாப்பிடாமலேயே திரும்பியவர். வேலையில் திருப்தியில்லையெனில் கோபத்தில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். என்னுடைய சரகத்தில் அவ்வளவு மகிழ்சியாக இருந்தார். முக்கியமான அரசாணை, Schemes எதுவும் வந்தால் லேசாக படித்து விட்டு என்னிடம் கொடுத்து படித்து பிறகு என்னிடம் சொல்லு என கூறுவார். நானும் படித்து பொறுமையாக சொல்வேன். நான் சொல்லும் போது வனச்சரகர் நிலையில் அதை பற்றி கூறுவதால் நம்முடைய நிலையையும் அதன் மூலம் அறிந்து கொள்வார். எந்த நிலையிலும் சிப்பந்திகளை விட்டுக்கொடுக்க மாட்டார். அவரிடம் பணிபுரிந்த போது நானும் திரு ஆண்டியப்பன் சரகரும்  காசோலையை அலுவலக ஊழியர் கனகராஜ்  என்பவருக்கு endorse பண்ணி அவர் வங்கிக்கு போகும் போது ஆடிக் காற்றில் காசோலை இரண்டும் நாகர்கோவில் ரோட்டில் பறந்து காணமலேயே போனது. சட்ட.தின் படி என்ன நடைமுறையோ அதை செய்தார். ஒரு மாதம் செக் வாங்கும் தகுதியை இழந்து மீண்டும் காசோலைகளை பெற்றோம். எந்த பேப்பரும் கிடையாது. மீண்டும் நான் திருவள்ளூர் பணி செய்த போது செங்கல்பட்டு கோட்ட வன அலுவலராக ஆக வந்தார். பல மாதங்கள் கழித்து  அங்குதான் பணி ஓய்வு. விழாவெல்லாம் வேண்டாம்னு தவிர்த்து  விட்டார்.  எனக்கு அன்றைக்கு முக்கிய கூட்டம் மாலை 6.00 மணிக்கு முடித்தது. ஜீப்பில் வேளச்சேரி JFM பில்டிங் வந்தேன். அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்க.  ஆனால் அவரிடம் பணிபுரிந்த சரகர், வனவர்கள் கட்டாயபடுத்தி வனப்பாதுகாவலர் திரு பிரபாகரன் தலைமையில் பணி மூப்பு விழா நடத்தினார்கள். முன்னறிவிப்பு இல்லாத அந்த கூட்டத்தில் 80 பேருக்கு மேல் இருந்தனர்.  எங்கள் கோட்டத்தில் நான் மட்டும். இவ்வளவு சிறப்பாக பணியாற்றியவருக்கு அரசாங்கம் இன்னும் இரண்டு வருடம் பணி நீட்டிப்பு செய்திருக்கலாம் என தோன்றியது.  இவர் ஓய்வு பெறும் போதும் மனது அதிகமாக வலித்தது. 

Tuesday, 20 November 2018

சமூக நீதி காத்த நீதிபதி

எளிமையின் திருஉருவம்

திருநெல்வேலியில் இருக்கும் போது அப்பாவுடன் ரயில்வேயில் பணியாற்றிய திரு கருப்பசாமி என்பவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவரது மிக நெருங்கிய உறவினர் அப்போதைய திமுக மாவட்ட செயலாளர் திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குடும்பத்தோடு வந்திருக்கும் போது பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் 1971 சட்ட மன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தேர்தலில் போட்டியிட்ட போது அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கள் பக்கத்து ஊர் திருப்புடைமருதூரைச் சார்ந்தவர் என்பதாலும் எனது தாத்தா எங்கள் ஊரில் அப்போதைய திமுக நகர செயலாளர் என்பதாலும் தாத்தா வீட்டிற்கு பல முறை வந்திருக்கிறார். எனது சித்தி திருமணம் இவரது தலைமையில் நடைபெற்றது.

தம்பி இருசக்கர வாகனவிபத்து

சென்னையில் நீதிபதி அவர்களது மகனுடைய புது காரில் என்னுடைய தம்பி இருசக்கர வாகனத்தில் மோதி சேதப்படுத்தி  காவல்துறையினர் தம்பியின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிக் கொண்ட போது  அப்போது காவல்துறை தலைவர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய எனது மாமா காவல்துறை உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்ட போது சார், நீதிபதி காரில் மோதியதால் அவர் சொல்லிதான் வாகனத்தை கைப்பற்றியுள்ளோம் எனவே ஒன்றும் செய்ய இயலாது என்றவுடன் நேரடியாக மாமா தம்பியுடன் நீதிபதி வீட்டிற்கு சென்று தான் இன்னார் என கூறியவுடன் தாத்தாவை பற்றி விசாரித்து விட்டு தொலைபேசி மூலம் தம்பியின் வாகனத்தை விடுவிக்க உத்திரவிட்டார்.

எனது அனுபவங்கள்

நான் செங்கோட்டை வனவராக பணியிலிருக்கும் போது குற்றாலம் VIP அருவிக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் வனக்காவலர், வனக்காப்பளருடன் தினமும்  ஒரு வனவர் என்ற முறையில் நான் ஒரு நாள் பணிக்கு போயிருந்தேன். அப்போது தலைமை நீதி மன்ற நீதிபதியாக ஒய்வு பெற்று தென் மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். அன்று மாலை மணி மூன்று இருக்கும். நான் ஐந்தருவி அருகில் ஒரு விடுதிக்கு அருகில் சேரில்  உட்கார்ந்திருந்தேன். ஒரு கார்  பழத்தோட்ட அருவி செல்லும் பாதையில் நிற்கிறது. அய்யாத்துரை என்ற வனக்காப்பாளர்,  இன்னும் இரண்டு வன ஊழியர்கள் சேர்ந்து வந்திருப்பவர் யாரென தெரியாமல் காரை உள்ளே விட மாட்டோம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு அரசாணையைக் காட்டுகிறார். DFOவிடமிருந்து லட்டர் வந்தால் அனுமதிக்கலாம் என  சொல்கிறார்கள்.  நான் சந்தேகப் பட்டு வேகமாக அருகில் வந்த போது காரில் நீதிபதி முன்னாலும், இரண்டு ஆயூதம் ஏந்திய காவலர்கள் பக்கத்திலும் நின்றிருந்தார்கள். நான் அருகில் சென்றவுடன் விபரீதம் புரிந்து விட்டது.  நீதிபதியை பார்த்து வணக்கம் செலுத்தி விட்டு ஜயா நீங்கள் பழத்தோட்ட அருவிக்கு சென்று வாருங்கள். ஐயாவை எங்கள் உழியர்களுக்கு தெரியாது மன்னித்து விடுங்கள் என வேண்டினேன்.  அவருடன் வந்த காவலர் ஒருவர்  என்னிடமும் அரசானையைக் காட்டினார். நான் ஐயாவை எனக்குத் தெரியும். ஒரு உத்திரவும் எனக்கு தேவையில்லை. அருவிக்கு சென்று வாருங்கள் என கூறியும், படித்து பாருங்கள் என்றார். அரசானையில் ஆணையத்தின் தலைவர் அவரை சார்ந்தவர்கள் தென்மாவட்டங்களில் எங்கு வேண்டுமானலும் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொஞ்சமும் கோபப் படாமல் உங்க ஆட்கள் போக கூடாதுன்னு தடுத்தாங்க. நான் இப்ப போகலை. பத்து நாள் கழித்து வருகிறேன் என சொல்லி திரும்பி விட்டார். அவர் சென்றவுடன் நமது துறை அலுவலர்களிடம்  அவரைப் பற்றி விவரம் கூறி கோபப் பட்டேன். அங்கிருந்தே அருகிலிருந்த விடுதியின் போன் மூலம் DFO திரு மனோஜ்குமார் சர்க்கார் அவர்களிடம் நடந்ததை கூறினேன்.

மீண்டும் குற்றாலம் வருகை

சுமார் மூன்று வாரங்களுக்கு பின்னர் மாவட்ட வன அலுவலரிடம் இருந்து செய்தி. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குடும்பத்தோடு குற்றாலம் வருகிறார். அவரை பழத்தோட்ட அருவிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். அதன் பின்னர் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் விருந்துக்கு அழைத்து வர வேண்டும். அதே போல மறுநாள் ராம்கோ ஓய்வு விடுதி சென்றோம். அய்யாத்துரை, அன்று பணியிலிருந்த அதே சிப்பந்திகள், கூடுதலாக குமாரசாமி, வனக்காப்பாளர் (நீதியரசரின் உறவினர்) நீதியரசர் குடும்பத்துடன் காரில் சென்று பழத்தோட்ட அருவியில் குளிக்கும் போது அங்கே இருந்த எங்களிடம், அவருக்கு வந்திருந்த உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டார். நான் எனது ஊர் தாத்தா பெயரை சொன்ன போது என் பக்கத்து ஊர்க்காரர் நாரயணபிள்ளை பேரனாய் இருந்துட்டு என்னை அருவியிலே குளிக்க விட மாட்டீரோ என கிண்டலாக கேட்டார். அய்யாத்துரையை மீசை பெரிசா இருக்கே வீரப்பனை பிடிக்க அனுப்பச் சொல்லட்டா? என்றார். குமாரசாமியிடம் ஊர் நிலவரம் கேட்டறிந்தார்.  இரண்டு மணி நேரம் அருவியில் இருந்து விட்டு வன ஓய்வு விடுதிக்கு வந்தோம். வன பாதுகாவலர் திரு R.K.ஓஜா அவர்களும், DFO திரு சர்க்கார் அவர்களும் வரவேற்க,  நீண்ட நேரம் அங்கிருந்து உரையாடி விட்டு  உணவுக்கு பின்னர் புறப்பட்டு சென்றார் அந்த மாமனிதர்.

மாமனிதர் என நான் சொல்வதற்கு காரணம் திரு செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஜீனியர் வக்கீலாக, பின்னர் அழகியநம்பி, வைகோ போன்றவர்கள் இவரிடம் ஜீனியராக இருந்தது, திமுகவின் முன்னணி தலைவராக இருந்தது, அரசு வழக்கறிஞர், உயர் நீதி மன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய ஊதிய குழு தலைவராக இருந்து IAS க்கு நிகராக IFS ஊதிய நிர்ணயம் செய்தது,  திருப்புடைமருதூர் திருக்கோவிலை ஒரு மன்னனை போல குடமுழுக்கு செய்தது, சொந்த ஊரில் எல்லா ஜாதியினருக்கும் எண்ணற்ற உதவிகள் செய்தது, எந்த சூழ்நிலையிலும் மிக எளிமையாக இருந்தது.  இறுதியாக இவர் நமது மாவட்டத்தில் பிறந்ததால் நெல்லை மாவட்டம் பெருமை கொள்ள  வேண்டும். இன்னமும் அவரை பற்றி சொல்ல அவர் காட்டிய எளிமை, இன்னும்  நிறைய சொல்லத் தோன்றுகிறது.