Tuesday, 20 November 2018

சமூக நீதி காத்த நீதிபதி

எளிமையின் திருஉருவம்

திருநெல்வேலியில் இருக்கும் போது அப்பாவுடன் ரயில்வேயில் பணியாற்றிய திரு கருப்பசாமி என்பவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவரது மிக நெருங்கிய உறவினர் அப்போதைய திமுக மாவட்ட செயலாளர் திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குடும்பத்தோடு வந்திருக்கும் போது பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் 1971 சட்ட மன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தேர்தலில் போட்டியிட்ட போது அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கள் பக்கத்து ஊர் திருப்புடைமருதூரைச் சார்ந்தவர் என்பதாலும் எனது தாத்தா எங்கள் ஊரில் அப்போதைய திமுக நகர செயலாளர் என்பதாலும் தாத்தா வீட்டிற்கு பல முறை வந்திருக்கிறார். எனது சித்தி திருமணம் இவரது தலைமையில் நடைபெற்றது.

தம்பி இருசக்கர வாகனவிபத்து

சென்னையில் நீதிபதி அவர்களது மகனுடைய புது காரில் என்னுடைய தம்பி இருசக்கர வாகனத்தில் மோதி சேதப்படுத்தி  காவல்துறையினர் தம்பியின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிக் கொண்ட போது  அப்போது காவல்துறை தலைவர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய எனது மாமா காவல்துறை உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்ட போது சார், நீதிபதி காரில் மோதியதால் அவர் சொல்லிதான் வாகனத்தை கைப்பற்றியுள்ளோம் எனவே ஒன்றும் செய்ய இயலாது என்றவுடன் நேரடியாக மாமா தம்பியுடன் நீதிபதி வீட்டிற்கு சென்று தான் இன்னார் என கூறியவுடன் தாத்தாவை பற்றி விசாரித்து விட்டு தொலைபேசி மூலம் தம்பியின் வாகனத்தை விடுவிக்க உத்திரவிட்டார்.

எனது அனுபவங்கள்

நான் செங்கோட்டை வனவராக பணியிலிருக்கும் போது குற்றாலம் VIP அருவிக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் வனக்காவலர், வனக்காப்பளருடன் தினமும்  ஒரு வனவர் என்ற முறையில் நான் ஒரு நாள் பணிக்கு போயிருந்தேன். அப்போது தலைமை நீதி மன்ற நீதிபதியாக ஒய்வு பெற்று தென் மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். அன்று மாலை மணி மூன்று இருக்கும். நான் ஐந்தருவி அருகில் ஒரு விடுதிக்கு அருகில் சேரில்  உட்கார்ந்திருந்தேன். ஒரு கார்  பழத்தோட்ட அருவி செல்லும் பாதையில் நிற்கிறது. அய்யாத்துரை என்ற வனக்காப்பாளர்,  இன்னும் இரண்டு வன ஊழியர்கள் சேர்ந்து வந்திருப்பவர் யாரென தெரியாமல் காரை உள்ளே விட மாட்டோம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு அரசாணையைக் காட்டுகிறார். DFOவிடமிருந்து லட்டர் வந்தால் அனுமதிக்கலாம் என  சொல்கிறார்கள்.  நான் சந்தேகப் பட்டு வேகமாக அருகில் வந்த போது காரில் நீதிபதி முன்னாலும், இரண்டு ஆயூதம் ஏந்திய காவலர்கள் பக்கத்திலும் நின்றிருந்தார்கள். நான் அருகில் சென்றவுடன் விபரீதம் புரிந்து விட்டது.  நீதிபதியை பார்த்து வணக்கம் செலுத்தி விட்டு ஜயா நீங்கள் பழத்தோட்ட அருவிக்கு சென்று வாருங்கள். ஐயாவை எங்கள் உழியர்களுக்கு தெரியாது மன்னித்து விடுங்கள் என வேண்டினேன்.  அவருடன் வந்த காவலர் ஒருவர்  என்னிடமும் அரசானையைக் காட்டினார். நான் ஐயாவை எனக்குத் தெரியும். ஒரு உத்திரவும் எனக்கு தேவையில்லை. அருவிக்கு சென்று வாருங்கள் என கூறியும், படித்து பாருங்கள் என்றார். அரசானையில் ஆணையத்தின் தலைவர் அவரை சார்ந்தவர்கள் தென்மாவட்டங்களில் எங்கு வேண்டுமானலும் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொஞ்சமும் கோபப் படாமல் உங்க ஆட்கள் போக கூடாதுன்னு தடுத்தாங்க. நான் இப்ப போகலை. பத்து நாள் கழித்து வருகிறேன் என சொல்லி திரும்பி விட்டார். அவர் சென்றவுடன் நமது துறை அலுவலர்களிடம்  அவரைப் பற்றி விவரம் கூறி கோபப் பட்டேன். அங்கிருந்தே அருகிலிருந்த விடுதியின் போன் மூலம் DFO திரு மனோஜ்குமார் சர்க்கார் அவர்களிடம் நடந்ததை கூறினேன்.

மீண்டும் குற்றாலம் வருகை

சுமார் மூன்று வாரங்களுக்கு பின்னர் மாவட்ட வன அலுவலரிடம் இருந்து செய்தி. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குடும்பத்தோடு குற்றாலம் வருகிறார். அவரை பழத்தோட்ட அருவிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். அதன் பின்னர் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் விருந்துக்கு அழைத்து வர வேண்டும். அதே போல மறுநாள் ராம்கோ ஓய்வு விடுதி சென்றோம். அய்யாத்துரை, அன்று பணியிலிருந்த அதே சிப்பந்திகள், கூடுதலாக குமாரசாமி, வனக்காப்பாளர் (நீதியரசரின் உறவினர்) நீதியரசர் குடும்பத்துடன் காரில் சென்று பழத்தோட்ட அருவியில் குளிக்கும் போது அங்கே இருந்த எங்களிடம், அவருக்கு வந்திருந்த உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டார். நான் எனது ஊர் தாத்தா பெயரை சொன்ன போது என் பக்கத்து ஊர்க்காரர் நாரயணபிள்ளை பேரனாய் இருந்துட்டு என்னை அருவியிலே குளிக்க விட மாட்டீரோ என கிண்டலாக கேட்டார். அய்யாத்துரையை மீசை பெரிசா இருக்கே வீரப்பனை பிடிக்க அனுப்பச் சொல்லட்டா? என்றார். குமாரசாமியிடம் ஊர் நிலவரம் கேட்டறிந்தார்.  இரண்டு மணி நேரம் அருவியில் இருந்து விட்டு வன ஓய்வு விடுதிக்கு வந்தோம். வன பாதுகாவலர் திரு R.K.ஓஜா அவர்களும், DFO திரு சர்க்கார் அவர்களும் வரவேற்க,  நீண்ட நேரம் அங்கிருந்து உரையாடி விட்டு  உணவுக்கு பின்னர் புறப்பட்டு சென்றார் அந்த மாமனிதர்.

மாமனிதர் என நான் சொல்வதற்கு காரணம் திரு செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஜீனியர் வக்கீலாக, பின்னர் அழகியநம்பி, வைகோ போன்றவர்கள் இவரிடம் ஜீனியராக இருந்தது, திமுகவின் முன்னணி தலைவராக இருந்தது, அரசு வழக்கறிஞர், உயர் நீதி மன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய ஊதிய குழு தலைவராக இருந்து IAS க்கு நிகராக IFS ஊதிய நிர்ணயம் செய்தது,  திருப்புடைமருதூர் திருக்கோவிலை ஒரு மன்னனை போல குடமுழுக்கு செய்தது, சொந்த ஊரில் எல்லா ஜாதியினருக்கும் எண்ணற்ற உதவிகள் செய்தது, எந்த சூழ்நிலையிலும் மிக எளிமையாக இருந்தது.  இறுதியாக இவர் நமது மாவட்டத்தில் பிறந்ததால் நெல்லை மாவட்டம் பெருமை கொள்ள  வேண்டும். இன்னமும் அவரை பற்றி சொல்ல அவர் காட்டிய எளிமை, இன்னும்  நிறைய சொல்லத் தோன்றுகிறது.

No comments: