Showing posts with label ARIGNAR ANNADURAI. Show all posts
Showing posts with label ARIGNAR ANNADURAI. Show all posts

Wednesday, 13 September 2017

ARIGNAR ANNADURAI


அண்ணா



காஞ்சிபுரத்தில்
ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணா என்று  வாஞ்சையோடு தமிழக மக்களால் இன்றும் என்றும் அழைக்கப்படும் அறிஞர் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள் 15.09.1909. முதுகலை பொருளியல், அரசியல் படித்து ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் பேச்சு வன்மை எழுத்து வன்மை. இலக்கியத்தில் புலமை.   இங்கிலாந்து மாணவர்கள் கிண்டலாக இவரது ஆங்கில புலமையை சோதிக்க, Because என்ற வார்த்தையை தொடர்ந்து மூன்று முறை உபயோகப்படுத்தி வாக்கியம் அமைத்து அவர்களை வாயடைக்க வைத்தது.  பத்திரிக்கை, நாடகம், சினிமா, மேடைபேச்சு, அரசியல் என அனைத்து துறை வித்தகர்.  

எதிர்க்கட்சி தலைவர்

பெரியாரும் கலைஞரும் பெரிய அளவில் பாராட்டுகளையும், எதிர்ப்பு விமர்சனங்களையும் தாங்கியது போல அண்ணா பெரிய அளவில் விமர்சனத்தை எதிர்கொள்ளவில்லை. காரணம் அண்ணாவை எதிர்ப்பவர்கள் கூட அவரை விமர்சனம் செய்ய தயங்குவார்கள்.  தன்னுடன் நெடுஞ்செழியன், மதியழகன்,சம்பத் என்.வி. நடராஜன், அன்பழகன், கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற திமையானவர்களை இரண்டாம் கட்ட தலைவர்களை தன்  தம்பிகளாக தன்னுடன் வைத்து கொண்டிருந்தது அண்ணாவுடைய தன்னம்பிக்கைக்கு சான்று. 1957 ல் எதிர் கட்சி தலைவராக இருந்த பொது காங்கிரஸ் உறுப்பினர்கள் நல்ல எதிர் கட்சியாக இயங்க திமுகவிற்கு தெரியவில்லை என சட்டசபையில் கேட்டபோது சாதுரியமாக "நீங்கள் எதிர் கட்சியாக இயங்க தெரியவில்லை என சொல்லிக்கொண்டிருப்பதை பார்த்தால் விரைவில் நீங்களே அந்த குறையை போக்க வருவீர்கள் என எண்ணுகிறேன் என்று ஒரே போடாக போட்டவர்,  மேலும் நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறிக்கொள்கிறேன்.    சொன்னது  போல் நடந்தது. 1967 க்கு பின் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னும் காங்கிரஸ் எதிர்கட்சியாக கூட வரமுடியாத நிலை இன்னும் தொடர்கிறது. தீர்க்கதரிசி.  
தமிழக முதல்வர்
1967 பொது தேர்தலில் மாபெரும் வெற்றி.  பெருந்தலைவர் காமராஜரே தோல்வி.  முதலமைச்சர் ஆனதும் தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம், ரூபாய்க்கு ஒரு படி அரிசி, இரண்டாம் உலக தமிழ் மாநாடு, சாதனை தொடர முடியாமல் புற்று நோய்.  03.02.1969 ல் மரணம். 
 இறுதி  ஊர்வலம்
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் பதினைந்து மில்லியன் மக்கள் கலந்து கொண்டது உலக கின்னஸ் சாதனை.  இன்றுவரை எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை.  மக்கள் அவர் மீது வைத்த அன்பிற்கும் நம்பிக்கைக்கும்  அதுவே சாட்சி.   
அண்ணாவின் எளிமை

எளிமையானவர், சொத்து சேர்க்காதவர், நேர்மையானவர், குழந்தைகள் இல்லாததால் நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தாலும் குழந்தைகள் யாரையும் அரசியல் பக்கமே அனுமதிக்கவில்லை. இறந்த போது அவர் பெயரில் இந்தியன் வங்கியில் இருந்தது வெறும் ஐயாயிரம் மட்டுமே. உலக வரலாற்றில் இறக்கும் தருவாயிலும் புத்தகம் படித்து கொண்டிருந்தவர்கள் பகத்சிங்கும் அண்ணாவும்தான். அண்ணா கடைசியாக அறுவை சிகிச்சைக்கு முன்னர் படித்த புத்தகம் The Master Christian என்ற புத்தகம். எழுதியவர் Marie Corelli என்பவர். அண்ணா இறுதியாக படித்த காரணத்தால் அன்றைய தினம் குமுதம் பத்திரிக்கை யில் "புரட்சி துறவி" என்ற பெயரில் ரா.கி.ரங்கராஜன் தமிழில் மொழி பெயர்த்து வெளியானது. 



             1962 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் தோற்ற பிறகு பாராளுமன்ற மேலவை உறுப்பினரான பின் வாஜ்பாயுடன் நன்கு நட்புறவு கொண்டார். டெல்லியில் வாஜ்பாய் பேசிய கூட்டத்தை கடைசி வரிசையில் தரையில் உட்கார்ந்து கேட்டு விட்டு மறுநாள் வாஜ்பாயுடன் தங்கள் கூட்டத்தை நேற்று கேட்டேன். மிகச்சிறந்த பேச்சு என அண்ணா கூறிய போது வாஜ்பாய் ஏன் கடைசி வரிசையில் தரையில் உட்கார்ந்து கேட்டீர்கள். மேடையில் வந்து அமர்ந்திருக்க வேண்டியதுதானே எனக் கேட்டார். திரராவிட நாகரிகத்தை அண்ணாவிடம் தான் கற்று கொண்டதாக வாஜ்பாயி ஒரு சமயம் தெரிவித்தார்

நான் திருநெல்வேலியில் 1968 ல் இப்போது ஜங்ஷன் பஸ் நிலையம் அருகில் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட அரசு விழாவில் அவர் பேசியதை  கேட்டேன் . அப்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.  ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அமைதி.  பேச ஆரம்பித்தவுடன் கேட்பவர்களின் மேனி சிலிர்க்கிறது. பேசும் போது வேட்டியை காட்டும் லாவகம், அவர் பேசக்கூடிய  பொருள் கேட்பவர் மனதில் அப்படியே பதியும்.  Pied piper பின்னால்  எலிகள் போனது போல் கேட்பவர்கள் எல்லாம் அவர் பின்னால்.  உயரம் குறைவு, கவரும் அழகு கிடையாது, ஆனாலும்   அவருகிணையான  ஆளுமை யாருக்கும் இல்லை. அவர் பெயர் சொல்லாமல் யாரும் தமிழ்நாட்டில் எப்போதும் அரசியல் செய்ய முடியாது.
தமிழ்நாடு முழுக்க மொட்டை
அண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் 15 மில்லியன் என்றால் அவர் இறந்ததற்காக மொட்டை போட்டவர்கள் தமிழகம் முழுதும் குறைந்தது அரை மில்லியன் பேர் இருக்கலாம். அதுவும் ஒரு கின்னஸ் தான்.  ஆனால் பதிவு செய்யப்பட வில்லை.  சில ஆண்டுளுக்கு முன் தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா முதல்வர்,  வழக்கிலிருந்து விடுதலை பெற ஆயிரக்கணக்கில் மக்கள் மொட்டை அடித்து கொண்டார்கள். பத்திரிக்கைகளில் எல்லாம் மொட்டைக்கு ரூபாய் 500 வீதம் கொடுத்து அடிக்கிறார்கள் என விமரிசனம் இருந்தது.  அதே தலைவர் இறந்த போது  மொட்டை அடிப்பதில் யாரும் ஆர்வம் காட்ட வில்லை.  உண்மை விசுவாசிகள் மட்டும் மொட்டை அடித்து கொண்டார்கள்.  ஆனால் அண்ணா மறைவுக்கு மொட்டை அடித்தவர்கள் சொந்த செலவில் உணர்ச்சி  மேலிட அடித்தவர்கள். எனக்கு சிறிய தாத்தா மகன், என்னுடைய சித்தப்பா அப்போது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர். தன்னுடைய தந்தை இறக்கும் பொது எங்கள் வழக்கப்படி மொட்டை போட மறுத்து விட்டார்.  பகுத்தறிவு காரணம் காட்டி.   ஆனால் அண்ணா இறந்த போது மொட்டை போட்டு கொண்டார் என்பது எனக்கு நினைவு இருக்கிறது.  என்னுடைய பள்ளியில் என்னுடைய ஆசிரியர்கள், பள்ளியில் கீழ்நிலை ஊழியர்கள் பலர் மொட்டையோடு வந்தார்கள் என்பது கூடுதல் செய்தி. தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை இருந்தது யாரும் மறக்க முடியாது. அண்ணாவை பற்றி எழுத எழுத செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அவர் நாடகத்தில், திரை படத்தில் அரசியலில், அரசு பதவியில் செய்த எண்ணிக்கையில் அடங்காத சாதனைகள் அவரை இன்னும் நூறாண்டுகளுக்கு நினைக்க வைக்கும்.