Monday 24 December 2018

M R RADHA, The legendry actor


                எம்ஆர். ராதாவை சின்னத்திரையில் பலே பாண்டியா என்ற பழைய திரைப்படத்தில் பார்த்தேன். நினைவுகள் பின்னோக்கி. இப்பவுள்ள இளைய தலைமுறை எம்ஜிஆரையும், சிவாஜியையும் காமெடியாக பார்க்கும் அதே நேரம் எம்ஆர் ராதாவை சீரியஸாக பார்க்கிறது. சிவாஜியே ஆரம்ப கட்டத்தில் அவரது நாடக கம்பெனியில் நடித்தவர்தான். வெள்ளைக்காரன் இவர் நாடகத்தை அடிக்கடி தடை செய்வான். இவர் நாடகத்தின் பெயரை மாற்றி காட்சிகளை மாற்றி அதே நாடகத்தை மீண்டும் மக்களின் ஏக ஆதரவோடு நடத்தியவர்.  அதற்காக பல முறை சிறை சென்றவர். இவ்வளவுக்கும் அவர் பள்ளிகூடம் சென்று படித்தவரில்லை. 1975 நாட்டில் எமர்ஜென்ஸி நடக்கும் போது திருநெல்வேலி பொருட்காட்சியில் அவரது நாடகம் பார்த்தேன். பயம் துளி கூட இல்லாமல் எமர்ஜென்ஸியையும், நீதி துறையையும், அரசு நிர்வாகத்தையும் கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டார். இத்தனைக்கும் எம்ஜிஆரை சுட்ட வழக்கில் ஜெயிலில் இருந்து வந்த பிறகு நடந்த நிகழ்சி.
நாடக தடைச்சட்டம் உருவாக்கப் பட்டு நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு எம் ஆர் ராதாவிற்கு பிடித்த காமராசர் ஆட்சியில் மட்டும் ராதா 52 தடவைகள் கைது செய்யப் பட்டுள்ளார்.
லட்சுமி காந்தன் என்ற நாடகத்தை 760 முறை மேடையேற்றினார்.
1954 ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ரத்த கண்ணீர் திரைபடத்திற்கு அவர் பெற்ற சம்பளம் ஒன்றேகால் கோடி. நினைக்கவே பிரமிப்பாக இருக்கும். அப்போது 10 கிராம் தங்கத்தின் விலை 77 ரூபாய் மட்டுமே. எவ்வளவு பெரிய நடிகர் என்பது விளங்குவதற்காக குறிப்பிட்டேன்.

பெரியார், காமராசர், அண்ணா அனைவரும் அவரை நேசித்தார்கள். எம்ஜிஆர் என்ற மாபெரும் மாமனிதரை சுட்டவர். எம்ஜிஆரை சுட்டவர் இவரை தவிர யார் செய்திருந்தாலும் மக்கள் கல்லால் அடித்திருப்பார்கள். ஆனால் இவர் மீது துரும்பு கூட பட்டதில்லை. அண்ணா உட்பட எந்த தலைவரும் எம்ஜிஆரை சுட்டதற்கு கண்டனம் தெரிவித்ததாக கூட எனக்கு நினைவில்லை. நான் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறேன். 1967 தேர்தல் நடைபெற போகிறது. எங்கு பார்த்தாலும் குண்டடி பட்டு சிகிச்சை பெறும் எம்ஜிஆரின் போஸ்டர்கள். திமுக இந்த சம்பவத்தை காங்கிரஸீக்கு எதிராக ஒட்டுக்கேட்க பயன் படுத்தியதே அல்லாமல் எம்ஆர் ராதா பெயரைக் மறந்தும் கூட யாரும் உச்சரிக்க வில்லை. எம்ஆர் ராதா எம்ஜிஆரை சுட்ட பின்பும் மக்கள் செல்வாக்கு பெற்றவராகவே இருந்தார்.
எம்ஜிஆரை சுட்ட வழக்கில் பரோலில் வந்து திருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டில் தங்கியிருந்த எம்ஆர் ராதாவை பெருந்தலைவர் காமராசர் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுடன் குமரி அனந்தனும் திராவிட கழக பிரமுகர் சிதம்பரம் கிருஷ்ணசாமி ஆகியோரும் சென்றிருந்தனர். எம் ஜி ஆருக்கு நெருக்கமான நடிகர் எஸ் எஸ் ஆருக்கு ராதாவுடன் மிக நெருக்கம். அப்போது எம்ஆர்ராதாவை ஜெயிலில் சந்தித்தார். எம்ஜிஆர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வேறு எந்த நடிகரும் சந்திக்க வில்லை. எம்ஜிஆரை சுட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் தண்டனை நாலரை ஆண்டுகளாக குறைக்கப் பட்டு  1971 ல் விடுதலையானார். ராதாவின் வழக்கறிஞர்கள் அப்போது பிரபலமான வக்கீல்கலான மோகன் குமாரமங்கலம் மற்றும் வானாமலை ஆகியோர்.
         பின்னாளில் ஜெயிலுக்கு போய் வந்த பிறகு மனோரமா மகன் பூபதி திருமணத்தில் கலந்து கொள்கிறார்.  அதே திருமணத்திற்கு வந்த எம்ஜிஆர் இவர் வந்திருப்பதை கேள்விப்பட்டு எம்ஆர் ராதாவின் அருகில் சென்று அண்ணன் நல்லா இருக்கிறீங்களா? இவரும் பதிலுக்கு நல்லாயிருக்கிறேன்.  இதை இப்ப சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்.     
                ராதாவின் இறந்த நாளும் பெரியாரின் பிறந்த நாளும் ஒன்று. .