Wednesday 23 October 2019

திருக்கோவில் தரிசனம் அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன் சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்


திருநெல்வேலி மதுரை சாலையில் கங்கைகொண்டானில் அமைந்துள்ள சிவாலயத்தையும் விஷ்ணு ஆலயத்தையும் இன்று தரிசனம் செய்தேன். கடைசியாக இத்திருத்தலங்களை தரிசித்து  ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அப்போது அ /மி கைலாசநாதர் திருக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க பணிகள் துவங்கிய நேரம். 2017 ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் ஆலயம் சூரியனால் வழி பட்ட ஆலயம் என்றும் அது சிவனின் வலது கண்ணாகவும், திருக்குற்றாலநாதர் திருக்கோவில் சந்திரனால் வழி பட்ட ஆலயம் என்றும் அத்திருத்தலம் சிவனின் இடது கண்ணாகவும், கங்கைகொண்டான் திருகைலாசநாதர் ஆலயம் அக்னியால் வழிபட்ட தலம் என்றும் இது சிவனின் மூன்றாவது கண்ணாகவும் கருதப்படுகிறது. இம்மூன்று தலத்திற்கும் கும்பாபிஷேகம் செய்த அகஸ்திய முனிவர் தன் மனைவி யோகமுத்ராவுடன் தன்பொருணை என்றழைக்கப்பட்ட இன்றைய தாமிரபரணி ஆற்றின்கரையில் வசித்து வந்தார்.
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஆனந்தவல்லி அம்மன் இத்திருவூரில் பிறந்து சிவனையே நினைத்து உருகி சிவனுடன் ஸ்ரீரங்கபெருமாளையடைந்த ஆண்டாளை போல் சிவனுடன் கலந்தார் என அவ்வூர் சிவனடியார் சொல்லக்கேட்டேன். 

இத்திருக்கோவிலில் ராஜகோபுரம் அழகுடன் மிளிர்கிறது. ஸ்தல விருஷமான பழைய புளிய மரம் அடிபக்கசுற்று  18 அடியில்  காணப்படுகிறது. கோவிலின் மதில்சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.

            இவ்வூரிலுள்ள விஷ்ணு திருத்தலம் அருள்மிகு கள்ளர்பிரான் சன்னதி என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் 400-500 ஆண்டுக்கால பழமையானது. இவ்வூரை சேர்ந்து உயர் பதவியிலிருந்த அன்பர் ஒருவரது சீரிய முயற்சியால் இத்திருத்தலமும் சில ஆண்டுகளுக்கு முன் புணரமைக்கப்பட்டுள்ளது.