1998 ஜூலை மாதம் 22 ந் தேதி புதன் கிழமை இரவு 10.00 மணிக்கு எங்கள் துறை சூப்பரின்டென்ட் வெங்கட்ராமன் தொலைபேசியில் என்னிடம் கல்யாணகுமார் என்பவர் இன்று மதியம் 2.00 மணியளவில் குற்றாலம் தேனருவி செல்லும் வழியில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டதாகவும் அவர் நமது துறை சூப்பிரெண்டெண்ட் ராஜாமணி என்பவரின் ஒரே மகன் என்றும், அவர் மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில இந்த சம்பவம் நடந்து விட்டது எனவும் தகவல் சொன்னார். நான் உடனே இரவு செங்கோட்டை வந்து அலுவலகத்தில் விசாரித்த போது, தகவல் கிடைத்த உடனே குற்றாலம் வனவர் சந்தானம் தலைமையில் குழு ஓன்று அந்தப்பகுதியில் மாலை வரை தேடியதாகவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிந்து புளியறைக்கு திரும்பினேன்.
மீட்பு பணி
மறுநாள் 23.07.1998 காவல்துறையினரும் தீ அணைப்பு துறையினரும், உள்ளுரில் இதற்கென்று இருக்கும் அனுபவமிக்க குழுவினரும் , தூத்துக்குடியிலிருந்து அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு ஜாங்கிட் அனுப்பிய நீச்சல் வீரர்களும் காலை முதல் மாலை வரை தேடியும் கிடைக்காததால் அவர் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என பரவலாக பேச்சு வந்தது. நான் அன்று மதியம் குற்றாலம் சென்று கல்யாணகுமாரின் அப்பா, அம்மா, உறவினர்களை சந்தித்து பின் மீண்டும் இரவு சென்று தேனருவி சென்று திரும்பியவர்களிடம் எங்கெங்கு தேடினீர்கள் என்று விவரம் கேட்டு புளியறைக்கு திரும்பி விட்டேன்.
தொலைபேசி
அழைப்பு
Selvaraj, Myself, Ramesh, Velladurai, Pathalam & Chinnathambi |
மரக்கட்டைகள்
நாங்கள் செண்பகாதேவி அருவி செல்லும் போது கல்யாணகுமாருடன் வந்த ஏழு பேரும் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களையும் உடன் அழைத்து இழுத்து செல்லப்பட்ட இடத்திற்கு வந்தோம். செண்பகாதேவி அருவிக்கும் தேனருவிக்கும் இடைப்பட்ட இடத்தை காட்டினார்கள். கையில் வைத்திருந்த துணியை ஓடையில் அலசும் போது வழுக்கி விழுந்து தண்ணீரோடு வேகமாக சென்று விட்டதை பார்த்ததாக சொன்னார்கள். அவர் உடுத்தி இருந்த வேட்டி மட்டும் மறு முனையில் கிடைத்ததாக சொன்னார்கள். பின்னர் எங்கள் குழுவினரும், குற்றாலம் போலீஸ் ஏட்டுக்கள் மணி, சின்னத்தம்பி ஆகியோர் கல்யாணகுமாரை தேட ஆரம்பித்தோம்.
பேய்
போல சத்தம்
பாறை மேல் மனம் சோர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொது செல்வராஜ் என்ற வனக்காப்பாளர் என் அருகில் வந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் நாங்கள் உட்கார்ந்திருக்கும் பாறைக்கு அடியில் எதோ லேசான ஊ ஊ என சத்தம் கேட்பதாக கூறினார். நான் கூர்ந்து கேட்டேன். அருகிலிருந்த ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை, மதியம் மணி 12.00 பேய்தான் சத்தம் போடுது என்றார். நீரோடைகளின் பெரும் இரைச்சலுக்கு நடுவே ஒன்றும் சரியாக கேட்கவில்லை. நாங்கள் உட்கார்ந்திருக்கும் பெரிய பாறைக்கு கீnH இருந்து சத்தம் வருகிறது என்பதை எப்படி தீர்மானிக்க முடியும். எனக்கு ஆள் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மூன்று நாள் அகி விட்டது. இருப்பினும் நான் அந்த பாறையில் பொந்து வழியாக தண்ணீர் செல்கிறது அதன் அருகில் உட்கார்ந்து விசிலை எடுத்து அடித்து நிறுத்தினேன். நான் நிறுத்திய உடன் பதிலுக்கு சன்னமாக ஒரு குரல் கேட்டது. மீண்டும் மீண்டும் செய்து பார்த்தேன். அதே போல சத்தம் கேட்டது. நானும் செல்வராஜும் இதை செய்து கொண்டிருக்கும் போது மற்றவர்கள் எல்லாம் ஆற்றில் தேடி கொண்டிருக்கிறார்கள்.
கயிறை கட்டி தொங்கிய ரமேஷ்
நான் ரமேஷை கூப்பிட்டு இந்த பாறைக்கு அடியில் அந்த பையன் இருக்க வாய்ப்பிருக்கு. “நீ இந்த தண்ணீர் போகும் ஓடை வழியாக கீழிறங்கி தொங்கிக்கொண்டு பார்க்கமுடியுமா” என கேட்டேன். பின்பு செண்பகவல்லி கோவிலிலிருந்து பெரிய கயிறு ஒன்றை தருவித்து அதை அருகில் உள்ள உயரமான பாறையில் கட்டி நடுவில் ரமேஷை பிடிக்க சொல்லி அந்த தண்ணீர் செல்லும் பொந்தில் இறங்க சொன்னோம். மூச்சு முட்டும் போது கயிறை ஆட்ட சொன்னோம். அவனும் துணிவுடன் கயிறை பிடித்து இறங்கினான். சிறிது நேரத்தில் கயிறை ஆட்ட நாங்கள் மேல தூக்கினோம். அவன்
நாங்கள் உட்கார்ந்திருந்த பாறைக்கு அடியில் பூணுல் அணிந்த ஒருவன் சிகப்பாக நின்று கொண்டிருக்கிறான், அவன் கையில் மோதிரம் உள்ளது என கூறினான்.
சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரமேஷை சென்று அவனுக்கு சைகையால் தைரியம் சொல்லி வா என்ன கூற ரமேஷ் தயங்க, அவனுடைய அப்பா உடனே அவனை தைரியம் சொல்லி மீண்டும் இறங்க சொன்னார். நான் இவ்வளவு நேரம் சொல்வதெல்லாம் மிக மிக வேகமாக நடந்தவை. ரமேஷ் மீண்டும் கயிறை பிடித்து கீழ் இறங்கி அவனுக்கு சைகையால் தைரியம் சொல்லி வந்தான். கல்யாணகுமார் உயிருடன் இருப்பது தெரிந்தவுடன் எல்லோருக்கும் பலமடங்கு சக்தி வந்து விட்டது. மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கொடுத்தேன். எனக்கு மட்டும் அவனை எந்த வழியில் வெளியே எடுத்தாலும் அப்போது அவன் உயிருக்கு ஆபத்து வந்து விட கூடாது என்ற எண்ணம் வந்ததால் சந்தானம் வனவருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கூறி உடனே தென்காசி தீயணைப்பு துறையினரை ஸ்ட்ரெச்சர் உடன் அழைத்து வரும் படி கூறினேன். அவர் கல்யாணகுமார் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்த போது அவர்கள் உயிருடன் இருப்பதாய் நம்ப வில்லை. பிறகு மாலை நேரம் நெருங்குவதால் மேலும் ஐந்து பெட்ரோமாக்ஸ் லைட்களை கொண்டு வர சொன்னேன்.
மனித அணை கட்டினோம்
நான் கல்யாணகுமாரை எப்படி வெளியே கொண்டு வரணும் என்று எங்கள் குழுவினரோடு ஆலோசனை பண்ணி கொண்டிருக்கும் போது ரமேஷ் ஒரு என்ஜினீரை போல் செயல் பட்டு திட்டம் வகுத்து கொடுத்தான். முதலில் ஆற்றில் தண்ணீரை திசை திருப்ப வேண்டும் என்றான். தண்ணீர் வரும் வழியை அடைத்து பார்த்தோம். முடிய வில்லை. பின்னர் அங்கு நின்றிந்த நூறுக்கும் மேற்பட்டவர்களை ஆற்றின் குறுக்கில் உட்கார வைத்து மேலும் மரங்களை வெட்டி குலைகளை போட்டு தண்ணீர் வரத்தை திசை மாற்றினோம். இன்னொருபக்கம் எங்கள் குழுவினர் பாறையை சுற்றி தோண்டி பார்க்க ஓரிடத்தில் சிறிய குழி ஓன்று தோண்ட அதன்வழியாக பார்த்தால் கலயாணகுமார் மிக அருகில் இருந்தான். அந்த ஓட்டைவழியே அவனுக்கு முதலில் ஆடை கொடுத்தோம். துணி ஏதும் இல்லாமல் இருந்தான். பின்னர் பிஸ்கட் கொடுத்தோம். ஓட்டையை பெரிதாக ஆக்கி கயிறை உள்ளே விட்டு அவன் இடுப்பில் கட்ட சொன்னோம். அவன் மூன்று நாள் தண்ணீரில் இருந்ததால் இடுப்பில் கட்டினால் வலிக்கிறது என கூறினான். பின்னர் குற்றாலம் கண்ணன் அந்த ஓட்டைக்குள் இறங்கி கல்யாணகுமாரை தூக்க மேலே இருந்து ரமேஷ் மற்றும் எங்கள் குழுவினர் கல்யாணகுமாரை தூக்க இந்த நேரத்தில் தீயணைப்பு வீரர்களுடன் சந்தானம் மற்றும் மாவட்ட வன அலுவலரும் வந்தனர்.
செண்பகவல்லிக்கு நன்றி
மாவட்ட வன அலுவலர் சர்க்கார் அவர்கள் வந்தவுடன் கல்யாணகுமாருக்கு தன் சட்டையை கழற்றி அணிவிக்க சொல்லி அவனை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து அந்த பகுதியிலிருந்து கீழே இறங்கி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு வந்து பூஜை செய்ய சொல்லி அனைவரும் மாவட்டவன அலுவலர் செண்பகவல்லிக்கு என கூற அங்கிருந்த நாங்கள் அனைவரும் ஜே என சத்தம் போட, பின்னர் படுக்க வைத்து வேகமாக
குற்றாலம் கொண்டுவந்து அவன் பெற்றோர்களிடம் காண்பித்து ஜீப்பில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுநாள் அவன் தாய் தந்தையாருடன் கிளம்பி சென்றான்.
குற்றாலம் கொண்டுவந்து அவன் பெற்றோர்களிடம் காண்பித்து ஜீப்பில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுநாள் அவன் தாய் தந்தையாருடன் கிளம்பி சென்றான்.
வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்
எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது இல்லை. குற்றாலம் வரலாற்றில் இன்று வரை அருவியில் விழுந்து மூன்று நாள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட வரலாறு இது ஒன்றுதான். என்னுடன் குழுவில் வந்த வெள்ளத்துரை, செல்வராஜ், பாலகிருஷ்ணன், பாதாளம், சின்னத்தம்பி, குற்றாலம் வனவர் சந்தானம் மற்றும் காவல்துறை நண்பர்கள் மணி, சின்னத்தம்பி, முக்கியமாக ரமேஷ் அவனது அப்பா வெள்ளைப்பாண்டி, குற்றாலம் கண்ணன், இறந்து போன வீர சங்கிலி இன்னும் இந்த முயற்சியில் அயராது ஈடுபட்ட மாவட்ட வன அலுவலர் திரு மனோஜ்குமார் சர்க்கார் அவர்களுக்கும் ஏனைய அணைவருக்கும் நன்றியை இன்றும் மீண்டும் தெரிவிக்கிறேன்.
Then conservator of Forests & District Forest officer with rescue team |