Friday 30 November 2018

நேர்மையின் சின்னம் திரு தேவதாஸ், கோட்ட வன அலுவலர்


நமது பயிற்சியில் ஆசிரியராக இருந்த திரு தேவதாஸ் அவர்களை பற்றி சொல்லாவிட்டால் நான் நல்ல மனிதனாக இருக்க முடியாது. திருமணமாகாதவர். நல்ல வகுப்பு எடுப்பவர். தகுதியுடையவர். அவர் பாடம் எடுத்த சர்வே, திரு  தங்கராஜ் சார் - வன விலங்கு, திரு G.T.ரங்கையன் -  வனச்சட்டம்  இந்த மூன்றுதான் சொல்லிக்கொடுத்தவுடன் எனக்கு புரிந்தது. மற்றதெல்லாம் தாமதமாக புரிந்தேன்.. அவரைப்பற்றி இப்படி அறிந்த நிலையில் என்னுடைய சரகர் திரு ஜெயபேரின்பகுமார் அவரைப்பற்றி அடிக்கடி சொல்ல கேட்ட நிலையில் நான் பணிபுரிந்த திருநெல்வேலி வனவிரிவாக்க கோட்டத்திற்கே வன விரிவாக்க அலுவலராக வந்தார். அப்போது வனவிரிவாக்க கோட்ட சரகர்களாக நானும் திரு ஜெயபேரின்பகுமார் இன்னும் இரண்டு பேர் பணிபுரிந்தோம். 24X7 நேரமும் வேலையை பற்றிய சிந்தனை. அப்பழுக்கற்ற ஒரு நேர்மையான, சதா வேலையை பற்றிய சிந்தனை கொண்ட மனிதர் வனத்துறையில் இருந்திருப்பார்களான்னு தெரியவில்லை.  தனீயார் நிலங்களில் மர வளர்ப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் வந்த நேரம். ஒரு சரகர் நட்டிய மரங்கள் நிறைய பட்டு போய் விட்டது. அந்த சரகரிடம் கேட்டால் சட்டம் பேசினார். தன்னுடைய சொந்த செலவில் அத்தனை செடிகளையும் இவர் மீண்டும் நட்டிக் கொடுத்தார். இது விஷயமாகவும் இன்னும் சில விஷயங்களுக்காகவும் அவரிடம்  மிகமிக வாக்குவாதம் செய்திருக்கிறேன். சரகர்கள் இப்படி  வேலை செய்கிறார்களேன்னு வருத்தப்பட்ட நிலையில் என்னுடைய சரகத்திற்கு கூட்டிப் போய் நடவு பணிகளை காட்டினேன். ரொம்ப சந்தோசமாகி நீயேண்டா முதலில் காட்டல. PCCF கூட்டிட்டு வந்திருப்பேனே என்று மகிழ்சியுடன் வருத்தப் பட்டு பிறகு கோவில்பட்டியில் சாப்பிட்டார். கருப்பட்டி மிட்டாய் வாங்கி கொடுத்தேன். அவருக்கு சுகர். இருந்தாலும் சாப்பிட்டார். மற்ற சரகம் போய் பார்த்து சாப்பிடாமலேயே திரும்பியவர். வேலையில் திருப்தியில்லையெனில் கோபத்தில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். என்னுடைய சரகத்தில் அவ்வளவு மகிழ்சியாக இருந்தார். முக்கியமான அரசாணை, Schemes எதுவும் வந்தால் லேசாக படித்து விட்டு என்னிடம் கொடுத்து படித்து பிறகு என்னிடம் சொல்லு என கூறுவார். நானும் படித்து பொறுமையாக சொல்வேன். நான் சொல்லும் போது வனச்சரகர் நிலையில் அதை பற்றி கூறுவதால் நம்முடைய நிலையையும் அதன் மூலம் அறிந்து கொள்வார். எந்த நிலையிலும் சிப்பந்திகளை விட்டுக்கொடுக்க மாட்டார். அவரிடம் பணிபுரிந்த போது நானும் திரு ஆண்டியப்பன் சரகரும்  காசோலையை அலுவலக ஊழியர் கனகராஜ்  என்பவருக்கு endorse பண்ணி அவர் வங்கிக்கு போகும் போது ஆடிக் காற்றில் காசோலை இரண்டும் நாகர்கோவில் ரோட்டில் பறந்து காணமலேயே போனது. சட்ட.தின் படி என்ன நடைமுறையோ அதை செய்தார். ஒரு மாதம் செக் வாங்கும் தகுதியை இழந்து மீண்டும் காசோலைகளை பெற்றோம். எந்த பேப்பரும் கிடையாது. மீண்டும் நான் திருவள்ளூர் பணி செய்த போது செங்கல்பட்டு கோட்ட வன அலுவலராக ஆக வந்தார். பல மாதங்கள் கழித்து  அங்குதான் பணி ஓய்வு. விழாவெல்லாம் வேண்டாம்னு தவிர்த்து  விட்டார்.  எனக்கு அன்றைக்கு முக்கிய கூட்டம் மாலை 6.00 மணிக்கு முடித்தது. ஜீப்பில் வேளச்சேரி JFM பில்டிங் வந்தேன். அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்க.  ஆனால் அவரிடம் பணிபுரிந்த சரகர், வனவர்கள் கட்டாயபடுத்தி வனப்பாதுகாவலர் திரு பிரபாகரன் தலைமையில் பணி மூப்பு விழா நடத்தினார்கள். முன்னறிவிப்பு இல்லாத அந்த கூட்டத்தில் 80 பேருக்கு மேல் இருந்தனர்.  எங்கள் கோட்டத்தில் நான் மட்டும். இவ்வளவு சிறப்பாக பணியாற்றியவருக்கு அரசாங்கம் இன்னும் இரண்டு வருடம் பணி நீட்டிப்பு செய்திருக்கலாம் என தோன்றியது.  இவர் ஓய்வு பெறும் போதும் மனது அதிகமாக வலித்தது. 

Tuesday 20 November 2018

சமூக நீதி காத்த நீதிபதி

எளிமையின் திருஉருவம்

திருநெல்வேலியில் இருக்கும் போது அப்பாவுடன் ரயில்வேயில் பணியாற்றிய திரு கருப்பசாமி என்பவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவரது மிக நெருங்கிய உறவினர் அப்போதைய திமுக மாவட்ட செயலாளர் திரு ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குடும்பத்தோடு வந்திருக்கும் போது பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் 1971 சட்ட மன்ற தேர்தலில் சேரன்மகாதேவி தேர்தலில் போட்டியிட்ட போது அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்கள் பக்கத்து ஊர் திருப்புடைமருதூரைச் சார்ந்தவர் என்பதாலும் எனது தாத்தா எங்கள் ஊரில் அப்போதைய திமுக நகர செயலாளர் என்பதாலும் தாத்தா வீட்டிற்கு பல முறை வந்திருக்கிறார். எனது சித்தி திருமணம் இவரது தலைமையில் நடைபெற்றது.

தம்பி இருசக்கர வாகனவிபத்து

சென்னையில் நீதிபதி அவர்களது மகனுடைய புது காரில் என்னுடைய தம்பி இருசக்கர வாகனத்தில் மோதி சேதப்படுத்தி  காவல்துறையினர் தம்பியின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிக் கொண்ட போது  அப்போது காவல்துறை தலைவர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய எனது மாமா காவல்துறை உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்ட போது சார், நீதிபதி காரில் மோதியதால் அவர் சொல்லிதான் வாகனத்தை கைப்பற்றியுள்ளோம் எனவே ஒன்றும் செய்ய இயலாது என்றவுடன் நேரடியாக மாமா தம்பியுடன் நீதிபதி வீட்டிற்கு சென்று தான் இன்னார் என கூறியவுடன் தாத்தாவை பற்றி விசாரித்து விட்டு தொலைபேசி மூலம் தம்பியின் வாகனத்தை விடுவிக்க உத்திரவிட்டார்.

எனது அனுபவங்கள்

நான் செங்கோட்டை வனவராக பணியிலிருக்கும் போது குற்றாலம் VIP அருவிக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் வனக்காவலர், வனக்காப்பளருடன் தினமும்  ஒரு வனவர் என்ற முறையில் நான் ஒரு நாள் பணிக்கு போயிருந்தேன். அப்போது தலைமை நீதி மன்ற நீதிபதியாக ஒய்வு பெற்று தென் மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார். அன்று மாலை மணி மூன்று இருக்கும். நான் ஐந்தருவி அருகில் ஒரு விடுதிக்கு அருகில் சேரில்  உட்கார்ந்திருந்தேன். ஒரு கார்  பழத்தோட்ட அருவி செல்லும் பாதையில் நிற்கிறது. அய்யாத்துரை என்ற வனக்காப்பாளர்,  இன்னும் இரண்டு வன ஊழியர்கள் சேர்ந்து வந்திருப்பவர் யாரென தெரியாமல் காரை உள்ளே விட மாட்டோம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு அரசாணையைக் காட்டுகிறார். DFOவிடமிருந்து லட்டர் வந்தால் அனுமதிக்கலாம் என  சொல்கிறார்கள்.  நான் சந்தேகப் பட்டு வேகமாக அருகில் வந்த போது காரில் நீதிபதி முன்னாலும், இரண்டு ஆயூதம் ஏந்திய காவலர்கள் பக்கத்திலும் நின்றிருந்தார்கள். நான் அருகில் சென்றவுடன் விபரீதம் புரிந்து விட்டது.  நீதிபதியை பார்த்து வணக்கம் செலுத்தி விட்டு ஜயா நீங்கள் பழத்தோட்ட அருவிக்கு சென்று வாருங்கள். ஐயாவை எங்கள் உழியர்களுக்கு தெரியாது மன்னித்து விடுங்கள் என வேண்டினேன்.  அவருடன் வந்த காவலர் ஒருவர்  என்னிடமும் அரசானையைக் காட்டினார். நான் ஐயாவை எனக்குத் தெரியும். ஒரு உத்திரவும் எனக்கு தேவையில்லை. அருவிக்கு சென்று வாருங்கள் என கூறியும், படித்து பாருங்கள் என்றார். அரசானையில் ஆணையத்தின் தலைவர் அவரை சார்ந்தவர்கள் தென்மாவட்டங்களில் எங்கு வேண்டுமானலும் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொஞ்சமும் கோபப் படாமல் உங்க ஆட்கள் போக கூடாதுன்னு தடுத்தாங்க. நான் இப்ப போகலை. பத்து நாள் கழித்து வருகிறேன் என சொல்லி திரும்பி விட்டார். அவர் சென்றவுடன் நமது துறை அலுவலர்களிடம்  அவரைப் பற்றி விவரம் கூறி கோபப் பட்டேன். அங்கிருந்தே அருகிலிருந்த விடுதியின் போன் மூலம் DFO திரு மனோஜ்குமார் சர்க்கார் அவர்களிடம் நடந்ததை கூறினேன்.

மீண்டும் குற்றாலம் வருகை

சுமார் மூன்று வாரங்களுக்கு பின்னர் மாவட்ட வன அலுவலரிடம் இருந்து செய்தி. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் குடும்பத்தோடு குற்றாலம் வருகிறார். அவரை பழத்தோட்ட அருவிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும். அதன் பின்னர் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் விருந்துக்கு அழைத்து வர வேண்டும். அதே போல மறுநாள் ராம்கோ ஓய்வு விடுதி சென்றோம். அய்யாத்துரை, அன்று பணியிலிருந்த அதே சிப்பந்திகள், கூடுதலாக குமாரசாமி, வனக்காப்பாளர் (நீதியரசரின் உறவினர்) நீதியரசர் குடும்பத்துடன் காரில் சென்று பழத்தோட்ட அருவியில் குளிக்கும் போது அங்கே இருந்த எங்களிடம், அவருக்கு வந்திருந்த உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டார். நான் எனது ஊர் தாத்தா பெயரை சொன்ன போது என் பக்கத்து ஊர்க்காரர் நாரயணபிள்ளை பேரனாய் இருந்துட்டு என்னை அருவியிலே குளிக்க விட மாட்டீரோ என கிண்டலாக கேட்டார். அய்யாத்துரையை மீசை பெரிசா இருக்கே வீரப்பனை பிடிக்க அனுப்பச் சொல்லட்டா? என்றார். குமாரசாமியிடம் ஊர் நிலவரம் கேட்டறிந்தார்.  இரண்டு மணி நேரம் அருவியில் இருந்து விட்டு வன ஓய்வு விடுதிக்கு வந்தோம். வன பாதுகாவலர் திரு R.K.ஓஜா அவர்களும், DFO திரு சர்க்கார் அவர்களும் வரவேற்க,  நீண்ட நேரம் அங்கிருந்து உரையாடி விட்டு  உணவுக்கு பின்னர் புறப்பட்டு சென்றார் அந்த மாமனிதர்.

மாமனிதர் என நான் சொல்வதற்கு காரணம் திரு செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஜீனியர் வக்கீலாக, பின்னர் அழகியநம்பி, வைகோ போன்றவர்கள் இவரிடம் ஜீனியராக இருந்தது, திமுகவின் முன்னணி தலைவராக இருந்தது, அரசு வழக்கறிஞர், உயர் நீதி மன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய ஊதிய குழு தலைவராக இருந்து IAS க்கு நிகராக IFS ஊதிய நிர்ணயம் செய்தது,  திருப்புடைமருதூர் திருக்கோவிலை ஒரு மன்னனை போல குடமுழுக்கு செய்தது, சொந்த ஊரில் எல்லா ஜாதியினருக்கும் எண்ணற்ற உதவிகள் செய்தது, எந்த சூழ்நிலையிலும் மிக எளிமையாக இருந்தது.  இறுதியாக இவர் நமது மாவட்டத்தில் பிறந்ததால் நெல்லை மாவட்டம் பெருமை கொள்ள  வேண்டும். இன்னமும் அவரை பற்றி சொல்ல அவர் காட்டிய எளிமை, இன்னும்  நிறைய சொல்லத் தோன்றுகிறது.

Thursday 15 November 2018

வனப் பயிற்சியில் எனது அனுபவங்கள்

சிந்தனை செய் மனமே

            என்னுடைய பயிற்சி தோழர். அவருக்கு போன் பண்ணிணால் அவர் பையன் அல்லது பெண் போனை எடுப்பாங்க. யார்னு கேட்பாங்க. அப்பாவோட நண்பர், கொஞ்சம் பேசனும். " அப்பா வெளியே போயிருக்காங்க". "எப்ப வருவாங்க"? "இரவுதான் வருவாங்க"  எப்ப போன் பண்ணிணாலும் இதுதான் நடக்கும். ஒருநாள் அவனுடைய ரேஞ்சரை பார்த்தேன். "இப்படி உங்க பாரஸ்டருக்கு போட்டால் அவன் எடுக்காமல் பிள்ளைகள் எடுத்து அப்பா வேலைக்கு போயிட்டார், எங்க போயிருக்கார்னு தெரியலைன்னு சொல்ராங்க"
அவர் போன் பண்ணும் போது "நீங்க யாருன்னு சொன்னீங்கன்னு" என்னிடம் கேட்டார். நான் என் பெயரை சொல்லி அவரது நண்பர் முக்கிய விஷயம் பேசனும் என கூறியதாக சொன்னேன். அதுக்கு அவர் ஒரு ஜடியா கொடுத்தார் பாருங்கள்.  நீங்க கூட கடைபிடிக்கலாம். போன் பேசி பிள்ளைகள் எடுத்து யாருன்னு கேட்டால் காண்ட்ராக்டர் பேசுகிறேன், சாரிடம் அவசரமாக பேசனும்னு சொல்லுங்க. உடனே லைனில் வருவான்னு சொன்னார்.
ஆச்சரியம். அதுபோலவே செய்தேன். உடனே வந்துட்டான். ரொம்ப திட்டி என் நம்பரை சேவ் பண்ணி இனிமேலாவது நான் கூப்பிட்டால் பேசுன்னு சொன்னேன்.
அவனது ரேஞ்சரிடம் போன் பண்ணி விஷயத்தை கூறினேன். அவர் சொன்னார் நானே வெவ்வேறு நம்பரிலிருந்து காண்ட்ராக்டர்னு சொல்லித்தான் கூப்பிட்டு பேசுவேன். இல்லைன்னா காண்ட்ராக்டர் போனிலேயே கூப்பிடுவேன். உடனே எடுப்பான். என் போனில் கூப்பிட்டா ஆறு மாதம் கூப்பிட்டாலும் எடுக்க மாட்டான் என்றார்.
வனச்சரகராக எல்லோரும் வெற்றியடைய முடியாது என உணர்ந்தேன்.


கண்டிப்பாக சிரிக்க கூடாது

              எனக்கு வன பயிற்சி 1983 ஜீன்  1 ல் ஆரம்பம். எனக்கு ஜுன் 18 ம் தேதிதான் ஆர்டர் வந்தது. 20 ம் தேதி வைகை அணை  பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன்.  எனது மிக நெருங்கிய நண்பன் பயிற்சியில் சேர ஜீன் பத்தாம் தேதி வாக்கில் மதியம் வைகை அணை பயிற்சி பள்ளி ஆபீஸில் ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்து விட்டு ஆஸ்டலுக்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் பீல்ட் ஓர்க் யூனிபார்மில் போய் கொண்டிருந்தார்கள். நண்பன் கொடுத்த அறிவுரை படி பெட்டி படுக்கைகளை ரூமில் வைத்து பீல்ட் ஒர்க் யூனிபார்ம் மாட்டி வேக வேகமாக நர்சரியில் அசெம்பிள் ஆக வரும் போது எல்லோரும் ரிப்போர்ட் பண்ணி பீல்டுக்கு போய் விட்டார்கள். ஆனால் மூணு வாத்தியார்கள் காக்கி பேண்ட் வெள்ளை சட்டையில் நர்சரியில் நின்று கொண்டிருந்தனர். நண்பனுக்கு தெரிந்து  விட்டது.இவர்களிடம்தான் ரிப்போர்ட் பண்ணணும், ஏற்கனவே நண்பன் சொல்லியிருக்கிறான். இவனும் புத்திசாலி.  நல்ல விரைப்பாக சல்யூட் அடிப்பான்.

          நண்பனுக்கு சிறிய குழப்பம். மூன்று பேரில் யாரிடம் ரிப்போர்ட் செய்வது. நண்பனின் மூளை வேகமாக முடிவெடுத்தது. மூவரில் இருவர் வயது குறைந்தவர்கள். ஒருவர் சற்று அனுபவசாலி தோற்றம், கண்ணாடி அணிந்திருந்தார். நண்பன் முடிவு பண்ணிணான். அவர் மூவரில் சீனியராக இருக்கலாம், எனவே அவரின் அருகில் சென்று மின்னல் வேகத்தில் விரைப்பாக சல்யூட் அடிக்க நண்பன் சல்யூட்அடித்ததை பார்த்த அந்த மனிதருக்கு கண்ணீல் கண்ணீர் வந்துட்டது. அவசர அவசரமாக நண்பனிடம் நான் பிளம்பர், நீங்கள் சாரிடம் ரிப்போர்ட் பண்ணுங்கள் என்று ஜைனுலாப்தீன் சாரை காட்டினார்.

        பயிற்சி முடியும் வரை நண்பன் மீது பிளம்பருக்கு தனி மரியாதை. எப்போ TA பில்லுக்கு குட்ஸ் ரேட் லாரி ரசீது எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுப்பார். அவரிடம் ஜாயின் பண்ணியவன் ஆயிற்றே.
         இதை நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் நானும் ஜீன் 20 ம் தேதி மதியம் அதே நேரம் தான் வந்தேன். ஆனால் நண்பர்கள் அண்ணாமலை, லோகநாதன் இருவரையும் பார்த்து அவர்கள் ரூமில் பெட்டியை வைத்து பீல்ட் டிரஸ் மாட்டி அவர்களை தனியே விடாமல் கூடவே வந்து கூட்டத்தில் சேர்ந்து ரிப்போர்ட் பண்ணினேன்.  இல்லையென்றால் நானும் நண்பனைபோல் பிளம்பர் அல்லது லாரி டிரைவர் யாரிடமாவது ஜாயின் பண்ணியிருக்க கூடும்.


நான் சந்தித்த வழக்குகள்

விசித்திரமான வழக்கு

             நான் திருவள்ளூர் வனசரகராக பணியாற்றி கொண்டிருந்த போது 2010,  ஒருநாள் மாலை மறுநாள் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு குறிப்பிட்ட சந்தன மர வழக்கு சம்மந்தமாக நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதி மன்றம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வந்தது.  சிறிது நேரத்தில் மாவட்ட  வன அலுவலர் என்னுடன் தொலை பேசியில் பேசி அவர் விசாரணை அலுவலராக இருக்கும் குறிப்பிட்ட உதவி வன பாதுகாவலர் தொடர்பான விசாரணை  கோப்பில் இருக்கும் சந்தன மர வழக்கு  தொடர்பான கோப்பினை எடுத்து மறுநாளில் நீதி மன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தினார்.  மாவட்ட வன அலுவலகம் சென்று சம்பந்தப்பட்ட வன குற்ற கோப்பினை எடுத்து வந்து படித்து பார்த்தேன்.
              மறுநாள் காலையில் சென்னை உயர் நீதி மன்றம் சென்று அரசு வழக்கறிஞரை சந்தித்து கோப்பில் உள்ள விவரம் கூறி சம்மந்தப்பட்ட கோர்ட்டில் காத்திருந்தேன். அரசு வழக்கறிஞர் வேறு ஒரு  சேம்பர் கோர்ட்டில் வழக்கில் ஆஜராகி வருவதாக கூறி  வழக்கு பட்டியல் நெருங்கும் பொது மிஸ்ட் கால் கொடுக்க சொல்லி சென்று விட்டார்.  நான் காத்திருந்த கோர்ட்டில் வழக்கு நெருங்கியவுடன் மிஸ்ட் கால் கொடுத்தேன். வழக்கு நெருங்க நெருங்க படபடப்பு.  அரசு வழக்கறிஞர் வந்த பாடில்லை. உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் ஆஜராக வேண்டிய சூழ்நிலையில் இதுபோன்ற இக்கட்டான சம்பவங்கள் நிகழும்.  ஒருவேளை நமது வழக்கு வரும்போது யாரும் இல்லை என்றால் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு கொடுத்து விட்டால் மிகவும்  சிக்கல்.  நான் சொல்லும் வழக்கில் ஜூனியர் யாரும் இல்லாததால் மிகவும் டென்ஷனாகி  விட்டேன்.  வேகமாக ஓடி பத்தாம் நம்பர் கோர்ட்டில் இருந்தவரிடம் சென்று  நிலைமை கூறி அழைத்து உடன் விரைந்து பதினேழாம் கோர்ட் வந்தோம்.  எங்கள் வழக்கு விசாரணைக்கு சற்று நேரத்தில் வந்தது.   நான் ஒரு ஓரமாக சீருடையில் நின்று கொண்டேன்.

வழக்கின் விவரம் 
                  “உதவி வன பாதுகாவலர் ஒருவர் உரிமம் பெற்ற சந்தன மர கிடங்கினை தணிக்கை செய்யும் பொது அனுமதி இல்லாமல் 390 கிலோ சந்தன மரம் இருப்பதை கண்டுபிடித்தார்.  அப்படியே நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய வழக்கு. ஆனால் அவர் சந்தனமர இருப்பினை  சந்தனமரக்கிடங்கில் நான்கு மூலைகளில் நூறு கிலோவிற்கு குறைவாக பிரித்து  நான்கு இடங்களில்  கிடங்கு மேலாளர் வேலையாட்கள் மூவர் பேரில் தனித்தனி வழக்காக பதிவு செய்து நான்கு வழக்கையும் இணக்க கட்டணம் வசூலித்து நான்கு வழக்கில் உள்ள சந்தன மரங்களையும் அரசுக்கு பறிமுதல் செய்து அவற்றை எடுத்து அலுவலகத்தில் கொண்டு இருப்பில் வைத்து விட்டார். அதோடு சும்மா இருந்தால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது.

             ஆனால் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரிடம் சில ஆவணங்களையும்,  மனுக்களையும் பெற்று கொண்டு பறிமுதல் செய்த சந்தனமரத்தை ரிலீஸ் செய்ய ஆணை பிறப்பித்து பணியிலிருந்து சென்று விட்டார்.  வேறு காரணங்களால் ஓய்வு பெற அனுமதிக்க படவில்லை.  பறிமுதல் செய்யப்பட்ட சந்தனமரத்தை அடுத்து வந்த உதவி வன பாதுகாவலர் திரும்ப கொடுக்க வாய்மொழியாக மறுத்து நீண்ட காலதாமதம் செய்கிறார்.  நான்கு பேரும்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சந்தன மரத்தை திரும்ப வழங்க வழக்கு தொடுக்க அது  தொடர்பாக வனத்துறை  நீதிமன்றத்தில் எந்த பதிலும் கொடுக்காததால் நீதி மன்றம் ஒரு காலகட்டத்தில் வழக்கின் பிரதிவாதியை நேரில் ஆஜராக கூறியது.   நான் போய் நின்ற காரணம் இதுதான்.  அரசு வழக்கறிஞரிடம் நீதியரசர் சந்தன மரத்தை பறிமுதல் செய்த அதிகாரி வந்துள்ளாரா? என கேட்க அவர் ஓய்வு பெற்று விட்டதால், அவர் சார்பில் வன சரகர் வந்துள்ளார் என்றவுடன் கோபப்பட்டு இப்படிதான் தப்பித்து விடுவார்கள் என்று கூறி அடுத்த வேலை நாளில் காலை பத்து மணிக்கு சம்பந்தப்பட்ட வனப்பாதுகாவலர் நேரில் ஆஜராக  நீதியரசர் உத்திராவிட்டார்.  மறுநாள் விநாயகர் சதூர்த்தி விடுமுறை என்பதால்.  நான் நேராக வனப்பாதுகாவலர் அலுவலகம் சென்று நமது பயிற்சி ஆசிரியரும், இரண்டு வருடங்களாக அவர் திருநெல்வேலியில் வனவிரிவாக்க அலுவலராக இருந்த போது  நான் சரகராக பணி புரிந்த  நமது நம்பிக்கைக்குரிய திரு தேவதாஸ் சார் அவர்களிடம் கோப்பினை கொடுத்து எல்லா விவரமும் கூறி வந்தேன். அவர் அப்போது கோட்ட வன அலுவலராகவும் (DCF) வனப்பாதுகாவலரின் நேர்முக உதவியாளர் பொறுப்பையும் வகித்து வந்தார்.

நீதியரசர் உத்திரவு

          அடுத்த வேலை நாளில் வனப்பாதுகாவலர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதியரசர் முன்புக்கு சந்தன மர வனக்குற்றத்தில் உதவி வன பாதுகாவலருக்கு நூறு கிலோவிற்கு உட்பட்ட வழக்குகளில் மரங்களை பறிமுதல் செய்யவும் இணக்க கட்டணம் விதிக்கவும் அதிகாரம் இருந்தாலும்அரசுக்கு பறிமுதல் செய்த சொத்துக்களை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என விளக்கம் கூற நீதியரசர் " உதவி வன பாதுகாவலர் சந்தன மரத்தை பறிமுதல் செய்ததை ரத்து செய்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்திரவு வழங்கினார்.

எனது கருத்து

இந்த வழக்கு தொடர்பாக எனக்கு அன்றும் இன்றும் ஒரு கருத்து உள்ளது. இரண்டாவதாக வந்த உதவி வன பாதுகாவலர் அதே சந்தன மரங்களை மீண்டும் பறிமுதல் செய்து உத்திரவு போட்டு திரும்ப வழங்க முடியாது என சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தால் என்ன சட்டசிக்கல் இருக்கிறது என்பதுதான். எதற்காக சம்மந்த பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றம் செல்ல வாய்ப்பளிக்க வேண்டும்?