விசித்திரமான வழக்கு
நான் திருவள்ளூர் வனசரகராக பணியாற்றி கொண்டிருந்த போது 2010, ஒருநாள் மாலை மறுநாள் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு குறிப்பிட்ட சந்தன மர வழக்கு சம்மந்தமாக நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதி மன்றம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வந்தது. சிறிது நேரத்தில் மாவட்ட வன அலுவலர் என்னுடன் தொலை பேசியில் பேசி அவர் விசாரணை அலுவலராக இருக்கும் குறிப்பிட்ட உதவி வன பாதுகாவலர் தொடர்பான விசாரணை கோப்பில் இருக்கும் சந்தன மர வழக்கு தொடர்பான கோப்பினை எடுத்து மறுநாளில் நீதி மன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தினார். மாவட்ட வன அலுவலகம் சென்று சம்பந்தப்பட்ட வன குற்ற கோப்பினை எடுத்து வந்து படித்து பார்த்தேன்.மறுநாள் காலையில் சென்னை உயர் நீதி மன்றம் சென்று அரசு வழக்கறிஞரை சந்தித்து கோப்பில் உள்ள விவரம் கூறி சம்மந்தப்பட்ட கோர்ட்டில் காத்திருந்தேன். அரசு வழக்கறிஞர் வேறு ஒரு சேம்பர் கோர்ட்டில் வழக்கில் ஆஜராகி வருவதாக கூறி வழக்கு பட்டியல் நெருங்கும் பொது மிஸ்ட் கால் கொடுக்க சொல்லி சென்று விட்டார். நான் காத்திருந்த கோர்ட்டில் வழக்கு நெருங்கியவுடன் மிஸ்ட் கால் கொடுத்தேன். வழக்கு நெருங்க நெருங்க படபடப்பு. அரசு வழக்கறிஞர் வந்த பாடில்லை. உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் ஆஜராக வேண்டிய சூழ்நிலையில் இதுபோன்ற இக்கட்டான சம்பவங்கள் நிகழும். ஒருவேளை நமது வழக்கு வரும்போது யாரும் இல்லை என்றால் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு கொடுத்து விட்டால் மிகவும் சிக்கல். நான் சொல்லும் வழக்கில் ஜூனியர் யாரும் இல்லாததால் மிகவும் டென்ஷனாகி விட்டேன். வேகமாக ஓடி பத்தாம் நம்பர் கோர்ட்டில் இருந்தவரிடம் சென்று நிலைமை கூறி அழைத்து உடன் விரைந்து பதினேழாம் கோர்ட் வந்தோம். எங்கள் வழக்கு விசாரணைக்கு சற்று நேரத்தில் வந்தது. நான் ஒரு ஓரமாக சீருடையில் நின்று கொண்டேன்.
வழக்கின் விவரம்
“உதவி வன பாதுகாவலர் ஒருவர் உரிமம் பெற்ற சந்தன மர கிடங்கினை தணிக்கை செய்யும் பொது அனுமதி இல்லாமல் 390 கிலோ சந்தன மரம் இருப்பதை கண்டுபிடித்தார். அப்படியே நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய வழக்கு. ஆனால் அவர் சந்தனமர இருப்பினை சந்தனமரக்கிடங்கில் நான்கு மூலைகளில் நூறு கிலோவிற்கு குறைவாக பிரித்து நான்கு இடங்களில் கிடங்கு மேலாளர் வேலையாட்கள் மூவர் பேரில் தனித்தனி வழக்காக பதிவு செய்து நான்கு வழக்கையும் இணக்க கட்டணம் வசூலித்து நான்கு வழக்கில் உள்ள சந்தன மரங்களையும் அரசுக்கு பறிமுதல் செய்து அவற்றை எடுத்து அலுவலகத்தில் கொண்டு இருப்பில் வைத்து விட்டார். அதோடு சும்மா இருந்தால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது.
ஆனால் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரிடம் சில ஆவணங்களையும், மனுக்களையும் பெற்று கொண்டு பறிமுதல் செய்த சந்தனமரத்தை ரிலீஸ் செய்ய ஆணை பிறப்பித்து பணியிலிருந்து சென்று விட்டார். வேறு காரணங்களால் ஓய்வு பெற அனுமதிக்க படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட சந்தனமரத்தை அடுத்து வந்த உதவி வன பாதுகாவலர் திரும்ப கொடுக்க வாய்மொழியாக மறுத்து நீண்ட காலதாமதம் செய்கிறார். நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சந்தன மரத்தை திரும்ப வழங்க வழக்கு தொடுக்க அது தொடர்பாக வனத்துறை நீதிமன்றத்தில் எந்த பதிலும் கொடுக்காததால் நீதி மன்றம் ஒரு காலகட்டத்தில் வழக்கின் பிரதிவாதியை நேரில் ஆஜராக கூறியது. நான் போய் நின்ற காரணம் இதுதான். அரசு வழக்கறிஞரிடம் நீதியரசர் சந்தன மரத்தை பறிமுதல் செய்த அதிகாரி வந்துள்ளாரா? என கேட்க அவர் ஓய்வு பெற்று விட்டதால், அவர் சார்பில் வன சரகர் வந்துள்ளார் என்றவுடன் கோபப்பட்டு இப்படிதான் தப்பித்து விடுவார்கள் என்று கூறி அடுத்த வேலை நாளில் காலை பத்து மணிக்கு சம்பந்தப்பட்ட வனப்பாதுகாவலர் நேரில் ஆஜராக நீதியரசர் உத்திராவிட்டார். மறுநாள் விநாயகர் சதூர்த்தி விடுமுறை என்பதால். நான் நேராக வனப்பாதுகாவலர் அலுவலகம் சென்று நமது பயிற்சி ஆசிரியரும், இரண்டு வருடங்களாக அவர் திருநெல்வேலியில் வனவிரிவாக்க அலுவலராக இருந்த போது நான் சரகராக பணி புரிந்த நமது நம்பிக்கைக்குரிய திரு தேவதாஸ் சார் அவர்களிடம் கோப்பினை கொடுத்து எல்லா விவரமும் கூறி வந்தேன். அவர் அப்போது கோட்ட வன அலுவலராகவும் (DCF) வனப்பாதுகாவலரின் நேர்முக உதவியாளர் பொறுப்பையும் வகித்து வந்தார்.
நீதியரசர் உத்திரவு
அடுத்த வேலை நாளில் வனப்பாதுகாவலர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதியரசர் முன்புக்கு சந்தன மர வனக்குற்றத்தில் உதவி வன பாதுகாவலருக்கு நூறு கிலோவிற்கு உட்பட்ட வழக்குகளில் மரங்களை பறிமுதல் செய்யவும் இணக்க கட்டணம் விதிக்கவும் அதிகாரம் இருந்தாலும்அரசுக்கு பறிமுதல் செய்த சொத்துக்களை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை என விளக்கம் கூற நீதியரசர் " உதவி வன பாதுகாவலர் சந்தன மரத்தை பறிமுதல் செய்ததை ரத்து செய்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்திரவு வழங்கினார்.
எனது கருத்து
இந்த வழக்கு தொடர்பாக எனக்கு அன்றும் இன்றும் ஒரு கருத்து உள்ளது. இரண்டாவதாக வந்த உதவி வன பாதுகாவலர் அதே சந்தன மரங்களை மீண்டும் பறிமுதல் செய்து உத்திரவு போட்டு திரும்ப வழங்க முடியாது என சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தால் என்ன சட்டசிக்கல் இருக்கிறது என்பதுதான். எதற்காக சம்மந்த பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றம் செல்ல வாய்ப்பளிக்க வேண்டும்?
No comments:
Post a Comment