My evergreen memories of Art, Politics, Current events, Past Events, Religion, Music, Entertainment , Environment & Lighter side of Life.
Saturday, 7 March 2020
ரயிலும் குடும்பமும்
கடல், யானை, ரயில் மூன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ரயிலில் அந்த காலத்தில் நீராவியால் ஓடிய இன்ஜின்களை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தாத்தா, சின்ன தாத்தா, பெரியப்பா, அப்பா என குடும்பத்தில் அனைவரும் ரயில்வே டிரைவராக பணி புரிந்ததாலும் அண்டை வீட்டு சிறுவயது நண்பர்களும் ரயில்வேயில் பணி புரிந்தவர்களின் பிள்ளைகளாக இருந்ததாலும் சிறுவயது விளையாட்டில் ரயில் ஓட்டும் விளையாட்டும் முக்கியமானது. வீட்டு கதவில் இன்ஜினில் உள்ளது போல் கம்பு, குச்சியெல்லாம் கட்டி இன்ஜினில் உள்ள பாகங்களை கற்பனையாக செய்து ரயில் இன்ஜினை எப்படி ஓட்டுவார்களோ அப்படி சத்தம் கொடுத்துக்கொண்டே ஓட்டுவது பிடித்தமான விளையாட்டு. அனைவருக்கும் அவர்அவர்கள் அப்பாவிற்கு சாப்பாடு கொடுக்கும் போது இன்ஜீனில் ஏறிபார்த்த அனுபவம் இருக்கும். நான் ஓரு படி மேலே சென்று அப்பா இன்ஜினில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். உள்ளே நிற்க முடியாத அளவு வெப்பம். ஓடும் போது பரவாயில்லை. எப்படி இயக்கிறார்கள் என்பது எங்களுக்கு அத்துப்படி. ஒவ்வொறு ரயில் நிலையத்திலும் இன்ஜினில் தண்ணீர் பிடிக்க ஒரு கூட்டம் ரெடியாக நிற்கும். நின்றவுடன் அவர்களது குடங்களை நிரப்பி விட்டு அடுத்த நிலையத்திற்கு பயணம் தொடரும். இது மனிதபிமான அடிப்படையில் இன்ஜினில் பணிபுரிபவர்கள் செய்யக்கூடியது. பிற்காலத்தில் அப்பாவே டீசல் இன்ஜினுக்கு மாறிய போது அந்த இன்ஜினில் எங்களுக்கு ஆர்வம் குறைந்து போனது. இப்போது நீராவி இன்ஜின்களை நேரிலோ படத்தையோ பார்த்தால் மனது உற்சாகமாகி விடும். அது எங்களின் ஜீன்களில் பதிந்து விட்டது.
No comments:
Post a Comment