வில்லுக்கார அம்மா
1980 களில் நான் தமிழ்நாடு வனத் துறையில் பாரெஸ்டர் பதவியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். எனக்கு எட்டயபுரம் சமூக வனசரகத்தில் பணி. என்னுடைய தலைமை இடம் தூத்துக்குடி அருகிலுள்ள குளத்தூர். விளாத்திகுளம் சரகத்தில் பணிபுரியும் பாரெஸ்டர் நண்பரும் (பின்னாளில் பாரஸ்ட் ரேஞ்சர் ஆக பணி நிறைவு பெயர் வேண்டாம்) சரகத்தில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றிய சாகுல் ஹமீது என்பவரும் விளாத்திகுளம் சரக அலுவலகத்திற்கு செல்லும் சாலைக்கு எதிப்புறம் உள்ள மாடியில் உள்ள ரூமில் வாடகைக்கு இருந்தார்கள். மாடிக்கு கீழ் வரிசையாக நான்கு வீடுகள். எல்லா வீடுகளிலும் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள். மாடியில் உள்ள நான்கு ரூம்களும் பேச்சிலர் ரூம். சாகுல் ஹமீதுவும் பாரெஸ்டரும் சேர்ந்து ஒரு ரூமில் தங்கி இருந்தார்கள். ரூமுக்கு இரண்டு சாவிகள். ஆளுக்கொன்றாக வைத்திருந்தார்கள். மற்ற மூன்று ரூம்களில் வேறு வேறு துறையை சார்ந்தவர்கள் இரண்டு இரண்டு பேராக தங்கி இருந்தார்கள்.
அப்போது ஞாயிறு ஒருநாள் மட்டும்தான் அரசு விடுமுறை. பாரெஸ்டர் வெள்ளி கிழமை ஊருக்கு போய் விட்டு ஞாயிறு இரவு 9.00 மணிக்கு வந்து விட்டார். திங்கள் கிழமை காலையில் முக்கிய பணி. அவரிடமிருந்த ரூம் சாவியை மறந்து வீட்டில் வைத்து வந்து விட்டார். சாகுல் ஹமீது இருப்பார் அவரிடம் சாவியை வாங்கி கொள்ளலாம் என வந்து விட்டார். ரூமுக்கு வந்து பார்த்தால் நான்கு ரூம்களும் பூட்டி கிடந்தது. இருவரும் சாப்பிடக்கூடிய மெஸ்ஸில் வந்து கேட்டதில் அவரும் சனிக்கிழமை இரவு ஊருக்கு போய் விட்டார் என்ற தகவல் வந்தது. பக்கத்துக்கு ரூம்களிலும் யாரும் கிடையாது. எல்லோரும் மறுநாள் காலையில்தான் வருவார்கள். மணி இரவு பத்து. இப்போது போல செல்போன் வசதியும் அப்போது கிடையாது. பாரெஸ்டர் யோசித்து பார்த்துவிட்டு மாடியில் நான்கு அடி நடை பாதையில் படுத்து தூங்கி விடலாம். காலையில் சாகுல் ஹமீது லேட்டாக வந்தாலும் மற்ற ரூம்களில் ஆட்கள் வந்து விடுவார்கள், ஒப்பேற்றி கொள்ளலாம் என முடிவு செய்தார்.
ஆனால் உடுத்தி இருக்கும் பாண்ட் சட்டையோடு எப்படி வெறுந்தரையில் படுப்பது என்று கீழே எட்டி பார்க்கிறார். கீழே நான்கு வீட்டிலும் நன்கு தூங்கி விட்டார்கள். அவர்களுக்கு இது நடு சாமம். மூன்றாவது வீட்டிற்கு நேராக இரண்டு மூன்று சேலைகள் துவைத்து காய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார். நைசாக கீழாய் இறங்கி வந்து ஒரு சேலையை எடுத்து வந்து மாடி வராண்டாவில் எட்டாக மடித்து விரித்து படுத்து விட்டார். அதிகாலையில் எழுந்து சேலையை இருந்த இடத்தில போட்டுவிட வேண்டும் என திட்டம். ஊரில் இருந்து வந்த அசதியும் இரவு கடற்காற்றும் சேலையை மடித்து விரித்து படுத்ததில் சுகமான தூக்கமுன்னா அப்படி ஒரு தூக்கம். காலை 8.00 மணிக்கு சுள் என வெயில் முகத்தில் அடித்து நண்பர் எழுந்து விட்டார். கீழே ஆள் நடமாட்டம் அதிகம் ஆகிவிட்டது. இனிமேல் சேலையை எடுத்த இடத்தில் போட்டால் மாட்டி கொள்வோம் என யோசித்து கொண்டிருக்கும் போது சாகுல் ஹமீது வந்து விட்டார். பக்கத்து ரூமில் சிலரும் வந்து விட்டார்கள். குடியே முழுகி போச்சு. யாருக்கு தெரிய கூடாதோ அவரே பார்த்து விட்டார். ஒரு ஆள் விடாமல் சொல்லுவாரே, நண்பர் யோசித்து கொண்டிருக்கும் போதே கீழே இருந்து சத்தம் கேக்கிறது. கீழே இருப்பவர் வில்லுப்பாட்டு கச்சேரி செய்பவர். மூன்று சேலையை துவைத்து தயார் பண்ணி இன்றைக்கு மதியம் வெளியூர் கோவிலில் வில்லு கச்சேரிக்கு கட்டிட்டு போகணுமே, ஒரு சேலையை காணோமே. இதென்ன கூத்து. விளாத்திகுளத்தில் சேலையை களவாங்க கள்ளன் வந்துட்டானே, அவன் மட்டும் கையில் கிடைச்சான் ஆஞ்சு போடுவேன் சத்தம் பலமாக கேட்குது. சாகுல்ஹமீது கிட்டேயும், இன்னொரு நண்பரிடமும் நடந்ததை கூறி சேலையை அப்படியே மடித்து ரூமில் ஒளித்து வைத்து , மறுநாள் அலாரம் வைத்தாவது காலை 3.00 மணிக்கு எழுந்து சேலையை இருந்த இடத்தில் போட்டு விடலாம் என முடிவெடுத்தார் நண்பர். சாவியை தெரியாமல் மறந்து வைத்ததற்கு இப்படி கேவல படணுமா? மனம் சமாதானமாக மறுக்கிறது.
மறுநாள் சேலையை இருந்த இடத்தில் போட்டாரா என்பது தெரியவில்லை. இப்போ ஊர்ப்பக்கம் போனால் கேட்கணும்.
மறுநாள் சேலையை இருந்த இடத்தில் போட்டாரா என்பது தெரியவில்லை. இப்போ ஊர்ப்பக்கம் போனால் கேட்கணும்.
No comments:
Post a Comment