கலைஞர்
கருணாநிதியின் திரை பட பயணங்கள்
முதலமைச்சராக அல்லது சட்டசபை பணிகள் இல்லாத காலகட்டத்தில் கூட பிரபல தமிழ் வார இதழில் குறிப்பிட்டது போல் “கலைஞர் எப்போதுமே கூடு தங்காத பறவை, வேலையே இல்லாவிட்டாலும் பறந்து கொண்டே இருப்பது அவரது பழக்கம். சி.ஐ.டி காலனி வீட்டில் அதிகாலை எழும் கருணாநிதி, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வந்து நடை பயிற்சி செய்து விட்டு கோபாலபுரம் வந்து காலை உணவை முடித்து விட்டு, கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் சென்று உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதித் தந்து விட்டு, மதிய உணவுக்காக சி.ஐ.டி காலனி வந்து, சிறிது ஒய்வுக்கு பிறகு 4.00 மணிக்கு கோபாலபுரம் வந்து, பார்வையாளர்களை சந்தித்து விட்டு, 6.00 மணிக்கு மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்து, 8.00 மணிக்கு சி.ஐ.டி காலனி வீட்டிற்கு செல்வது என்ற பயணத்திலேயே இருந்தார்.” முப்பது ஆண்டுகளாக மாறாத ஷெட்யூல் இது என குறிப்பிட்டுள்ளது.
ராஜகுமாரி
கலைஞர், தனது 20 வது வயதில் முதல் திரை படத்திற்கு வசனம் எழுதினார் . 1947ல் வந்த ராஜகுமாரி அவருக்கு நல்ல புகழை தந்தது. ராஜகுமாரி திரைப்படத்தில் எம்ஜிஆர், மாலதி, S.V.சுப்பையா, T. S. பாலையா, M.N. நம்பியார் ஆகியோர் நடித்தனர். இது ஒரு மந்திரவாதி ராஜகுமாரியை அடைய திட்டம் தீட்டுவது, வில்லன் பாலையாவை வென்று, மந்திரவாதியை வென்று சாதாரண எம்ஜிஆர்
ராஜகுமாரியை அடைவது என்ற இந்த கதையில் நம்பியார் எம்ஜிஆருக்கு துணையாக நடிப்பார்.
இந்த படத்தில் கலைஞரின் வசனம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. பட டைட்டிலில் கலைஞர் பெயரை உதவி ஆசிரியர் என போட்டனர்.
எம்ஜிஆர் நடித்த படங்கள்
1948ல் வெளிவந்த அபிமன்யு, 1950ல் வெளிவந்த மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி என கலைஞரின் முதல் நான்கு படங்களும் எம்ஜிஆர் நடித்த படங்கள்.
மருதநாட்டு இளவரசியும், மந்திரி குமாரையும் கலைஞரின் வசனத்தில் மெருகு பெற்றன. 1952ல் வெளிவந்த பராசக்தியின் தான் கலைஞர் அரசியல் கருத்துக்களை வசனமாக எழுதி சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரால் பேசப்பட்டு, பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டது. குறிப்பாக கோர்ட் காட்சிகளில் சிவாஜி பேசிய கலைஞரின் வசனம் மிக மிக அதிக அளவில் பேசப்பட்டது. பராசக்தி சிவாஜிக்கு மட்டுமல்லாமல், எஸ் எஸ் ஆர், பண்டரிபாய், ரஞ்சனி என நான்குபேருக்கும் முதல் படமாக அமைந்தது.
மலைக்கள்ளன் சிறந்த திரைப்படம்
அதே ஆண்டில் வந்த மணமகள், மனோகரா, பணம் ஆகிய திரை படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றாலும் சிவாஜியின் மனோகரா கலைஞரின் வசனத்திற்கு ஒரு மைல் கல். மணமகள் என் எஸ் கிருஷ்ணன் நடித்த படம். கலைஞர் எத்தனையோ படங்களுக்கு வசனம் எழுதினாலும் சிவாஜி அதை பேசி நடிக்கும் போது கலைஞரின் புகழ் மென்மேலும் அதிகரிப்பதை காண முடிகிறது. எஸ்.எஸ்.ஆரும் கலைஞர் வசனத்தை அழகு தமிழில் பேசினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். திரும்பி பார், மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, புதையல், ராஜாராணி, புதுமை பித்தன், குறவஞ்சி, அரசிளங் குமரி, தாயில்லாப்பிள்ளை என எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என மாறி மாறி வசனங்களை எழுதி புகழ் பெற்றார். ராஜா ராணி திரை படத்தில் சிவாஜி கலைஞர் எழுதிய மிக நீண்ட வசனத்தை பேசி சாதனை ஒன்றை புரிந்தார். எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதி பரிசு பெற்றது.
மலைக்கள்ளன் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 140 நாட்கள் ஓடி தொண்ணூறு லட்ச ரூபாய் வசூல் புரிந்து சாதனை படைத்தது.
அப்போதே எம்.ஜி.ஆர் வசூலில் மன்னன் என்பதை நிரூபித்தார்.
பூம்புகார்
கலைஞரின் பூம்புகார் சிலப்பதிகார கதை அடிப்படையாக கொண்டு கலைஞரால் கதை வசனம் எழுதி தயாரிக்கப்பட்டது.
இப்படத்தில் வாழ்க்கை என்னும் ஓடம் என்ற பாடலும் கலைஞர் எழுதியதுதான். ஏனைய பாடல்களும் இன்றைக்கும் கேட்பதற்கு இனிமையானவை. இத்திரைப்படத்தில் கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ். எஸ். இராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ, கவுந்தி அடிகளாக கே. பி. சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜயகுமாரி கிளைமாக்ஸ் காட்சியில் பாண்டிய மன்னன் அரசவையில் பேசும் வசனம் மிக பிரமாதமாக இருக்கும். விஜய குமாரி பெண் சிவாஜியை போல் வசனம் பேசி அசத்தி விடுவார். இந்த படத்தை திருநெல்வேலி ரத்னா தியேட்டரில் என்னுடைய சின்ன மாமாவுடன் பார்த்து நடந்து வரும் போது சைக்கிள் ஓன்று எனது காலில் ஏறி வீட்டுக்கு வரும் போது நொண்டி கொண்டே ரத்த காயத்துடன் வந்து, சினிமாவிற்கு போனதற்காக எனது அப்பாவின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானேன்.
பிள்ளையோ பிள்ளை
பூமாலை, அவன் பித்தனா? என சில படங்களுக்கு பின் முரசொலி மாறனின் சொந்த படமான மு.க.முத்து இரு வேடங்களில் நடித்த பிள்ளையோ பிள்ளை முக்கியமான படம். இந்த படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. கலைஞரின் வசனத்தில் வெளிவந்த மற்றொரு கலைஞரின்
படம் பாலைவன ரோஜாக்கள். அதற்கு பின்னர் பல படங்கள் வசனம் எழுதி 2011ல் பொன்னார் சங்கர் என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதி 1947முதல் 2011 முடிய மொத்தம் 39 தமிழ் படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர்
ஐந்து முறை முதலமைச்சர் ஏனைய நேரங்களில் எதிர் கட்சி தலைவர், முரசொலி ஆசிரியர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் என பல்வேறு பொறுப்புகளுடன் 39 திரைப்படங்களுக்கு வசனம், பல படங்களை தயாரித்தது என மிக நீண்ட திரை பயணத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment