Monday, 22 October 2018

விஜயதசமி நினைவுகள்


விஜயதசமி நினைவுகள்

திருநெல்வேலியில்  மாணவ பருவத்தில் இருந்த எனக்கு சரஸ்வதி பூஜையை யொட்டி நடைபெறும் விழாக்கள் மகிழ்சியை தரக்கூடியது. ஜங்ஷனில் அருள்மிகு கண்ணம்மன் கோவில், புதுஅம்மன் கோவில், சிந்துபூத்துறை அருள்மிகு செல்வியம்மன் கோவில், மேகலிங்கபுரம், மணிமூர்த்தீஸ்வரம் அருள்மிகு செல்வியம்மன் கோவில், வண்ணார்பேட்டை அருள்மிகு பேராத்து செல்வி அம்மன் இதனுடன் திருநெல்வேலி,தச்சநல்லூர் பாளையங்கோட்டை பகுதிகளில் மொத்தம் பதினோறு கோவில்களிலும் பத்து நாள் தசாரா கொண்டாட்டம் களை கட்டும். இறுதிநாளில் பதினோரு கோவில்களின் சப்பரங்களும் நகரைச் சுற்றி வந்து நடு இரவில்  பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வரிசையாக பதினோரு சப்பரங்களிலும் அம்பாள் வேறுவேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பது காண கிடைக்காது. எந்த சப்பர அலங்காரம் சிறப்பு என போட்டி இருக்கும்.  சப்பரங்கள் சம்மந்தப்பட்ட கோவில் திரும்ப  மறுநாள் காலை எட்டு மணி வரை ஆகும்.




 
 
மாணவ பருவத்தில்  அவ்வப்போது நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் வைக்கும் கொலுக்களை பார்ப்பது அங்கு கொடுக்கப்படும் சுண்டல் போன்ற பிரசாதங்களை  வாங்கி உண்பது,  கோவில்களில் தினமும் நடைபெறுகிற கலை நிகழ்சிகள் - பத்து நாள் எப்படி போனதுன்னு தெரியாது. ஒவ்வொறு வீட்டிலும் சில புது பொம்மைகளை வருடந்தோறும் வாங்கி பழைய பொம்மைகளோடு மிகவும் சிரத்தையாக அடுக்கி பத்து நாட்களும் சிரத்தையாக  பூஜை செய்து, கொலுவை காண வருகிற  நண்பர்கள், உறவினர்களுக்கு பிரசாதங்களும் வெற்றிலை பாக்குடன் பிளவுஸ் துணி போன்றவைகளை வழங்கி மகிழ்வது, சிறு வயதில் கற்ற பாடல்களை பல தாய்மார்கள் பாடத்துணிவது, அந்த பாடல்களை சிரித்த படியே கேட்பது  எல்லாம் இந்த விழாவை மேலும் கலகலப்பாகும்.  கொலுவில் ஒற்றை படை எண்ணில் படிகள் அமைத்து பொம்மைகளை முறைபடி அடுக்குவது என அநேக சாஸ்த்திரங்கள்.  கீழிருந்து மேலாக வரிசைபடுத்தினால் முதலில் நிலம், புல்வெ ளிகள், குளம், அதில் மீன்கள், செடி கொடி மரம், காய்கனி சார்ந்த பொம்மைகள். அடுத்த வரிசையில் விலங்குககள், பறவைகள், வாகனங்கள், பல தொழில் செய்யும் மனிதர்கள் என காட்சிப்படுத்த வேண்டும். அடுத்த வரிசையில் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் எனவும் முனிவர்கள், ஞானிகள், துறவிகள் விவேகானந்தர், புத்தர் போன்ற பொம்மைகள், மேல்தட்டு வரிசைகளில் கடவுளின் திருவுருவங்கள், அவதாரங்கள்  போன்றவைகளை அடுக்குவது பாராம்பரியம். பூமியில் நிலம், உயிரினங்கள், மனிதர்கள், மகான்கள், தெய்வங்கள் என்ற மேல் நோக்கி அமைக்க வேண்டும். இப்போது கொலு வைப்பவர்கள் சிலர் கடவுள் பொம்மைகளை கீழ் வரிசையிலும், மனிதர்கள், தலைவர்கள் சிலைகளை மேல்வரிசையிலும் வைத்திருப்பது சரியானதல்ல. 
 வீடுகளில் சரஸ்வதி படத்திற்கு முன்னால் பூஜை பொருட்களோடு பாடப்புத்தகங்களை வைத்து பூஜை செய்து மறுநாள் காலை மீண்டும் பூஜை செய்து புத்தகங்களையும் திரும்ப எடுப்பது மரபு. தொழிற்கூடங்கள், அலுவலகங்கள், வாகனங்களை சுத்தப்படுத்தி அவற்றிற்க்கு பூஜை செய்து நண்பர்களுக்கும் அலுவலர்களுக்கும் கண்டிப்பாக அவல் பொரியோடு இனிப்புகளும் வழங்கி மகிழ்வது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பிரசித்தம். தீபாவளி வரை அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும்  இனிப்பு வழங்குவது நீடித்துக் கொண்டிருக்கும்.


திருநெல்வேலி மாவட்டத்தை விட கன்னியாகுமரி மாவட்டத்தில் சரஸ்வதி பூஜையை சிறப்பாக கொண்டாடுவதை நான் இரண்டு முறை கண்டு களித்திருக்கிறேன்.  திருநல்வேலி நகர் போல தசாரா கொண்டாட்டங்கள் நாகர்கோவிலில் இல்லையென்றாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் மற்ற இடங்களை ஒப்பிடும்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப் படுகிறது. வேற்று மத அலுவலர்கள் கூட தம் தம் அலுவலகங்களில் இந்த பூஜைக்கு ஆதரவாக இருப்பதை கண்டுள்ளேன். திருவாங்கூர் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் சரஸ்வதி பூஜை அங்கு கொண்டாடப்படுவதை போல இங்கும் கொண்டாடப் படுகிறது. திருவாங்கூர் அரண்மனையில் சரஸ்வதி பூஜையை யொட்டி பொதுமக்கள் அரண்மனைக்குள் செல்ல, தங்கத்திலான சரஸ்வதி விக்கிரகத்தை வழி பட அனுமதிக்கப் படுவது சிறப்பு. டாக்ஸி, ஆட்டோ சங்கத்தினர் விழாவை மிகுந்த பொருட்செலவில் கொண்டாடுவது நாகர்கோவிலிலும் திருவனந்தபுரத்திலும் வழக்கமான ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தை இந்த பண்டிகை மீண்டும் நினைக்க தோன்றுகிறது.

வில்லுக்கார அம்மா


வில்லுக்கார அம்மா
 

1980 களில் நான் தமிழ்நாடு வனத் துறையில் பாரெஸ்டர் பதவியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  எனக்கு எட்டயபுரம் சமூக வனசரகத்தில் பணி.  என்னுடைய தலைமை இடம் தூத்துக்குடி அருகிலுள்ள குளத்தூர். விளாத்திகுளம் சரகத்தில் பணிபுரியும் பாரெஸ்டர்  நண்பரும்   (பின்னாளில் பாரஸ்ட் ரேஞ்சர் ஆக பணி நிறைவு பெயர் வேண்டாம்) சரகத்தில் டிராக்டர் ஓட்டுநராக  பணியாற்றிய  சாகுல் ஹமீது என்பவரும் விளாத்திகுளம் சரக அலுவலகத்திற்கு செல்லும் சாலைக்கு எதிப்புறம் உள்ள மாடியில்  உள்ள ரூமில் வாடகைக்கு இருந்தார்கள். மாடிக்கு கீழ் வரிசையாக நான்கு வீடுகள்.  எல்லா  வீடுகளிலும் குடும்பத்தோடு வசித்து வந்தார்கள். மாடியில் உள்ள  நான்கு ரூம்களும் பேச்சிலர் ரூம். சாகுல் ஹமீதுவும் பாரெஸ்டரும் சேர்ந்து ஒரு ரூமில் தங்கி இருந்தார்கள். ரூமுக்கு இரண்டு சாவிகள். ஆளுக்கொன்றாக வைத்திருந்தார்கள்.  மற்ற மூன்று ரூம்களில் வேறு வேறு துறையை சார்ந்தவர்கள் இரண்டு இரண்டு பேராக தங்கி இருந்தார்கள்.  

அப்போது ஞாயிறு ஒருநாள் மட்டும்தான் அரசு விடுமுறை.  பாரெஸ்டர் வெள்ளி கிழமை ஊருக்கு போய் விட்டு ஞாயிறு இரவு 9.00  மணிக்கு வந்து விட்டார்.  திங்கள் கிழமை காலையில் முக்கிய பணி. அவரிடமிருந்த ரூம் சாவியை மறந்து வீட்டில் வைத்து வந்து விட்டார்.  சாகுல் ஹமீது இருப்பார் அவரிடம் சாவியை வாங்கி கொள்ளலாம் என வந்து விட்டார்.  ரூமுக்கு வந்து பார்த்தால் நான்கு ரூம்களும் பூட்டி கிடந்தது.   இருவரும் சாப்பிடக்கூடிய மெஸ்ஸில் வந்து கேட்டதில் அவரும் சனிக்கிழமை இரவு ஊருக்கு போய் விட்டார் என்ற தகவல் வந்தது.   பக்கத்துக்கு ரூம்களிலும் யாரும் கிடையாது. எல்லோரும் மறுநாள் காலையில்தான் வருவார்கள். மணி இரவு பத்து.  இப்போது போல செல்போன் வசதியும் அப்போது கிடையாது.  பாரெஸ்டர் யோசித்து பார்த்துவிட்டு மாடியில் நான்கு அடி நடை பாதையில் படுத்து தூங்கி விடலாம். காலையில் சாகுல்  ஹமீது லேட்டாக வந்தாலும் மற்ற ரூம்களில் ஆட்கள் வந்து விடுவார்கள், ஒப்பேற்றி கொள்ளலாம் என முடிவு செய்தார். 

ஆனால் உடுத்தி இருக்கும் பாண்ட் சட்டையோடு எப்படி வெறுந்தரையில் படுப்பது என்று கீழே  எட்டி பார்க்கிறார்.  கீழே நான்கு வீட்டிலும் நன்கு தூங்கி விட்டார்கள்.   அவர்களுக்கு இது நடு சாமம்.  மூன்றாவது வீட்டிற்கு நேராக இரண்டு மூன்று சேலைகள் துவைத்து காய்ந்து கொண்டிருப்பதை பார்த்தார்.  நைசாக கீழாய் இறங்கி வந்து ஒரு சேலையை எடுத்து வந்து மாடி வராண்டாவில் எட்டாக மடித்து விரித்து படுத்து விட்டார்.  அதிகாலையில் எழுந்து சேலையை இருந்த இடத்தில போட்டுவிட வேண்டும் என திட்டம்.    ஊரில் இருந்து வந்த அசதியும் இரவு கடற்காற்றும் சேலையை மடித்து விரித்து படுத்ததில் சுகமான தூக்கமுன்னா அப்படி ஒரு தூக்கம்.  காலை 8.00 மணிக்கு சுள் என வெயில் முகத்தில் அடித்து நண்பர் எழுந்து விட்டார்.  கீழே ஆள் நடமாட்டம் அதிகம் ஆகிவிட்டது.  இனிமேல் சேலையை எடுத்த இடத்தில் போட்டால் மாட்டி கொள்வோம் என யோசித்து கொண்டிருக்கும் போது  சாகுல்  ஹமீது  வந்து விட்டார்.  பக்கத்து ரூமில் சிலரும் வந்து விட்டார்கள்.  குடியே முழுகி போச்சு.  யாருக்கு தெரிய கூடாதோ அவரே பார்த்து விட்டார்.  ஒரு ஆள் விடாமல் சொல்லுவாரே, நண்பர் யோசித்து கொண்டிருக்கும் போதே கீழே இருந்து சத்தம் கேக்கிறது.  கீழே இருப்பவர் வில்லுப்பாட்டு கச்சேரி செய்பவர்.  மூன்று சேலையை துவைத்து தயார் பண்ணி இன்றைக்கு மதியம் வெளியூர் கோவிலில் வில்லு கச்சேரிக்கு கட்டிட்டு போகணுமே, ஒரு சேலையை காணோமே. இதென்ன கூத்து. விளாத்திகுளத்தில் சேலையை களவாங்க கள்ளன் வந்துட்டானே, அவன் மட்டும் கையில் கிடைச்சான்  ஆஞ்சு  போடுவேன் சத்தம் பலமாக கேட்குது. சாகுல்ஹமீது கிட்டேயும், இன்னொரு நண்பரிடமும் நடந்ததை கூறி சேலையை அப்படியே மடித்து ரூமில் ஒளித்து வைத்து , மறுநாள் அலாரம் வைத்தாவது காலை 3.00 மணிக்கு எழுந்து சேலையை இருந்த   இடத்தில் போட்டு விடலாம் என முடிவெடுத்தார் நண்பர்.  சாவியை தெரியாமல் மறந்து வைத்ததற்கு இப்படி கேவல படணுமா?  மனம் சமாதானமாக மறுக்கிறது. 
  மறுநாள் சேலையை இருந்த இடத்தில் போட்டாரா என்பது தெரியவில்லை.  இப்போ ஊர்ப்பக்கம் போனால் கேட்கணும்.