கேரளா தமிழ்நாடு மாநில வனத்துறை
நான் 1993-1996 ஆம் வருடம் திருநெல்வேலி கோட்டத்தில் குற்றாலம் பாரஸ்டர் ஆக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் தான் தமிழ்நாடு வனத்துறையும் கேரளா வனத்துறையும் இணைந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரண்டு மாநில வனத்துறை அதிகாரிகளின் கூட்டம் நடத்துவது என்றும் திருநெல்வேலி வனப்பாதுகாவலர், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலரும் அச்சன் கோயில், தென்மலை கோட்ட வன அலுவலர்களும் சம்மந்தப்பட்ட திருவனந்தபுரம் வனப்பாதுகாவலரும் இப்போது southern circle kollam சம்மந்தப்பட்ட வனசரகர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலாவது கூட்டம் குற்றாலம் வன ஓய்வு விடுதியில் நடை பெற்றது. இரு மாநில வன எல்லைகளை நில அளவை செய்வது, இரு மாநில பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை இரு மாநில அதிகாரிகளும் பேசி முடிவு எடுப்பது, இரு மாநில வனக்குற்றவாளிகளை பிடிக்க பரஸ்பரம் இரு மாநில வன அலுவலர்களும் ஒத்துழைப்பு தருவது தொடர்பாக பேசி முடிவு எடுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து கூட்டம் அச்சன்கோவில், கடையநல்லூர், புளியங்குடி, ஆரியங்காவு, தென்மலை போன்ற இடங்களில் நடை பெற்றது. கேரளாவில் டெபுடி ரேஞ்ச் பாரஸ்ட் ஆபீசரும் தமிழ்நாடு பாரஸ்டரும் ஒரே ரேங்க்.
கேரளா அதிகாரிகளுடன் நட்புறவு
இரு மாநில வன அதிகாரிகளின் கூட்டத்தின் விளைவாக அனைவர்க்கும் குறிப்பாக எனக்கு அச்சன்கோவில், ஆரியங்காவு சரகர்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்பும் பழக கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அதில் அப்போது ஆரியங்காவு பாரஸ்ட் ரேஞ்சராக பணியாற்றிய திரு உன்னி கிருஷ்ணன் முக்கியமானவர். அரியங்காவிலிருந்து ஷாப்பிங் செய்ய அடிக்கடி செங்கோட்டை வரும் பொது என்னை சந்திப்பார். நான் ஆரியங்காவு செல்லும் போது அவரை சந்திப்பது வழக்கம்.
நான்கு மணி நேரத்தில் பிடித்த கைதி
1996 பிற்பகுதியில் செங்கோட்டை பிரிவு வனவராக பணியாற்றும் போது ஒரு நாள் காலையில் 9.00 மணியளவில் ஆரியங்காவு ரேஞ்சர் திரு உன்னி கிருஷ்ணனும் அவரது சிப்பந்திகளும் ஜீப்பில் புளியரையிலுள்ள எனது குவாட்டர்ஸுக்கு பரபரப்பாக வந்து காலை 6.00 மணிக்கு அவர்களது சரகத்தில் உள்ள கடமான்பாரா என்னுமிடத்தில் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்த கும்பலை பிடிக்கும் பொது ஒருவன் மட்டும் பிடிபட்டு மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் தப்பியோடிய ஒருவன் செங்கோட்டையை சேர்ந்தவன் என்றும் அவனது பெயர் அப்பா பெயர் மட்டும் சொல்லி அவனை உடனே பிடிக்கனும்னு சொன்னார். உடனே நான் அவரது ஜீப்பில் ஏறி செங்கோட்டை வந்து எனது செக் ஷனில் பணியாற்றிய கார்ட் ஒருவரிடம் விவரத்தை கூறி அவனது பெயர் அப்பா பெயரை பத்து நிமிடத்துக்குள் விசாரித்து, வீடு இருக்கும் இடம் விசாரித்து உடனே அந்த கார்டையும் அழைத்துக்கொண்டு செங்கோட்டை பார்டர் பகுதிக்கு வந்தோம். இப்போது பிரபலமான பார்டர் பரோட்டா கடைக்கு சற்று தூரத்தில் கடைகளுக்கு பின் பக்கம் சந்தன மரம் வெட்டி விட்டு ஓடிவந்தவன் குடிசை வீடு இருந்தது. தூரத்தில் ஜீப்பை நிறுத்தி விட்டு நடந்து அவன் வீடு முன் போய் நின்றோம். அப்போது காலை மணி 10.00.. அவன் அப்போது வீட்டிற்குள் அமர்ந்து மிகவும் ஆவலோடு பழையசோறு சாப்பிட்டு கொண்டிருந்தான். ஓடி சென்று அவனை பிடிக்க சென்ற கேரளா வனத்துறையினரை தடுத்து அவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு நான் மட்டும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து, அவன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்து, பின்னர் அவனை விசாரித்தோம். அவன் சந்தன மரம் வெட்டி கொண்டிருக்கும் போது வனத்துறையினரை கண்டு காட்டு வழியாக பல மைல் தூரம் ஓடி ஒருவழியாக ரோடு வந்து லாரியில் ஏறி செங்கோட்டை வீடு வந்து பசியில் சாப்பிட்டு கொண்டிருந்தான். நாங்கள் அவன் வீடு வந்து பிடிப்போம் என நினைத்தே பார்க்கவில்லை என்றான். நான் அவனை ஆரியங்காவு ரேஞ்சரிடம் ஒப்படைத்து அவனை உடல் ரீதியாக துன்புறுத்தாமல் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டினேன்.இன்னும் வளரும்
No comments:
Post a Comment