Sunday, 13 August 2017

எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தம்


  எம்.ஜி.ஆர் 



  1971 ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப் படுகிறது. அகில இந்தியா காங்கிரஸ் 1969 ல் இரண்டாக உடைந்து பிரதமர் இந்திரா காந்தியால் எந்த திட்டங்களும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத  சூழ்நிலையில் பாராளுமன்றத்தை கலைக்க சிபாரிசு செய்து ஓராண்டுக்கு முன்னதாக தேர்தலை  எதிர் கொள்கிறார்.  தமிழகத்தில் கருணாநிதியும் சட்டசபையை கலைக்க சிபாரிசு செய்து விட்டு தேர்தலை எதிர் கொள்கிறார். திமுகவும் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து ஓரணியில்.  காமராஜர் தலைமையிலான காங்கிரஸும், ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியும் ஏனைய சிறுகட்சிகளும் இணைந்து ஓரணியில். தேர்தலில் கண்டிப்பாக காமராஜர் தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என பத்திரிக்கைகளும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் இருந்த ராஜாஜி அவரது அரசியல் எதிரியான காமராஜருடன் கூட்டணி அமைத்தது மிகப்பெரும் பலமாக பார்க்கப்பட்டது.  காமராஜர் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர்.  1969 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காமராஜரை எதிர்த்து போட்டியிட்ட மத்தியாஸ் இந்தத் தேர்தலில் காமராஜர் தலைமையிலான கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர்.

 எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம்

     1967 தேர்தலின் பொது குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர இயலவில்லை.  1967 தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம். கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள்  தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். ராஜாஜி சில மேடைகளில் காமராஜரோடு இணைந்து பேசுகிறார்.  சிவாஜி கணேசன், மூப்பனார், குமரி அனந்தன், நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி, பா. ராமசந்திரன் ஆகிய பல தலைவர்களும் காமராஜரின் பிரதிநிதிகளாக பிரச்சாரம் செய்கிறார்கள். 

      எம்ஜி ஆர் கிராமம் கிராமமாக செல்கிறார். மக்கள் கூட்டத்தில் நீந்தி வருகிறார். எங்கும் அவரை பார்க்க மக்கள் வெள்ளம்,  இரண்டு நாள் வரை தாமதமாக வருகிறார்காலையில் பத்து  மணி என்றால் மறுநாள் இரவு 11.00 மணிக்கு வருவார்அதுவரை மக்கள் கூட்டம் அந்த இடத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கும்திடீரென்று இரண்டு மூன்று கார்கள் ஒன்றாக சென்றால்  தூரத்தில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் எம்ஜி ஆர் வந்து விட்டார் என கத்திக் கொண்டே ரோட்டருகே வருவதும் வந்து ஏமாற்றத்தோடு திரும்பி போவதும் அடிக்கடி நடக்கும்.  கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், வேனிலிருந்து பேசி விட்டு போவார்எம்ஜி ஆரால் குறித்த நேரத்தில் வர இயலாது என்பதால் கூட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகள் தோன்றி வியாபாரம் களைகட்டும்.  திமுக முன்னணி கிராம தலைவர்களை சுற்றி கூட்டம் விசாரித்துக் கொண்டே இருக்கும்.  அவர்களுக்கும் எம்ஜி ஆர் எப்போது வருவார் என தெரியாதுஎதாவது ஒரு பதிலை சொல்லி கொண்டிருப்பார்கள். கிராமங்கள் தோறும்  திருவிழா கோலம். எங்கு பார்த்தாலும் திமுக கொடிகளும், ஒலிபெருக்கி சத்தங்களும் என ஒரே ஆரவாரம்இறுதியில் இதோ வந்துவிட்டார் பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் என ஒலிபெருக்கி சத்தமிட்டு  கொண்டு முன்னே ஒரு கார் செல்ல தொடர்ந்து நாலைந்து கார்கள் தொடர்ந்து ஒரு வெள்ளை வேனில் நிஜமாகவே வந்து விட்டார் புரட்சி தலைவர்இரண்டு நிமிடம் பேசி விட்டு மின்னல் போல தோன்றி மறைவார். யாரும் நல்ல பார்த்ததாக சொல்ல முடியாது.   பக்கத்துக்கு ஊருக்கு சென்று மீண்டும் பார்ப்பது, கூட்டம் முழுவதும் தேர்தல் முடியும் வரை அவரை பற்றியே பேசி கொண்டிருக்கும். இடையில் சிவாஜி, காமராஜர். கருணாநிதி யார் வந்தாலும் எம்ஜி ஆருக்கு வந்த கூட்டமும் தாக்கமும் இருக்காதுஇந்த நிகழ்வுகள் நடக்கும் பொது எனக்கு எம்ஜிஆர் மீது எந்தவித ஈர்ப்பும் கிடையாதுநான் சிவாஜி ரசிகன். எம்ஜிஆரை பார்க்க எல்லோரும் போகும் பொது விருப்பமில்லாமல் நண்பர்களுடன் போனவன் நான்ஆனால் அவரை பார்த்ததும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உடல் புல்லரிப்பதை நானும் உணர்ந்தேன்அப்படி ஒரு தோற்றம்.  

மக்களின் மனதில் சிம்மாசனம் 

                Charisma என்னும் ஆங்கில வார்த்தைக்கு சரியான உதாரணம் எம்ஜிஆர்தான். நான் அவரது பரங்கிமலை தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கத்தில் தற்போது வசித்து வருகிறேன்இன்றைக்கும் முகம் தெரியாத கட்சியில் எந்த பலனையும் அனுபவிக்காத தொண்டர்கள் அவரது பிறந்த நாள் அன்று சாலைகளில் அவரது படத்தை வைத்து மாலை அணிவித்து பார்க்கிறவர்களுக்கெல்லாம்  இனிப்பு வழங்குவதை இப்போதும் பார்த்து கொண்டிருக்கிறேன் இது எப்படி அவரால் சாத்தியமாயிற்றுகேரளாவை சேர்ந்தவர், கண்டியில் பிறந்து சிறு வயதில் அப்பாவை இழந்து, தமிழ்நாடு வந்து படிப்பை தொடர முடியாமல், நாடகத்தில் நடிக்க தொடங்கி சினிமாவில் நுழைந்து மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அவரது வாழ்வு உலக வரலாற்றில் யாருக்கும் அமைய வில்லைஎன்டிஆரை  கடவுளாக பாவித்த ஆந்திராவில் அவர் இரண்டாவதாக சிவபார்வதியை திருமணம் செய்த போது அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவிடம் ஆட்சியை பறிகொடுத்து திரும்பவும் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லைசட்டமன்ற உறுப்பினர்களை சந்திரபாபு நாயுடு தங்க வைத்திருந்த ஹோட்டலுக்கு பஸ் கூரையில் அமர்ந்து சென்று அழைத்து பார்த்தும் யாரும் உடன் வரவில்லைநம்பிக்கை வாக்கெடுப்பில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற ஆட்சியை இழந்தார். எம்ஜி ஆர் ஊழல் செய்தார் என எதிர் கட்சிகள் குறிப்பாக கருணாநிதி சொல்லும் போது ஒருவர் கூட நம்ப தயாராக இல்லை. அவர் அப்படி செய்ய மாட்டார். அவருக்கு ஊழல் செய்ய அவசியம் இல்லை. அவர் சொந்த பணத்தை தான் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குகிறார் என குற்றசாட்டை வந்த வேகத்தில் நிராகரித்ததை பார்த்திருக்கிறேன்.

சேரன்மகாதேவி தொகுதி

எம்ஜி ஆர் மேல் மக்களுக்கு இருந்த அன்பு தமிழ்நாடு முழுவதும் இருந்தாலும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மட்டும் சற்று குறைவாக இருந்ததாக ஞாபகம்அங்கு காமராஜர் மீது ஒரு வித பக்தி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். மீண்டும் 1971 தேர்தலுக்கு வருவோம். என்னுடைய சேரன்மகாதேவி தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பாக திரு D.S.A. சிவபிரகாசமும், திமுக சார்பில் திரு ரத்தினவேல் பாண்டியன் என்பவரும் போட்டியில்திரு ரத்தினவேல்பாண்டியன் திமுகவின் மாவட்ட செயலாளரும் ஆவார்இவர்தான் பின்னாளில் உச்ச நீதி மன்றத்தின் நீதியரசராக பணியாற்றியவர். திரு சிவப்பிரகாசம் முக்கூடல் சொக்கலால் பீடி அதிபரின் மைத்துனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான D.S. ஆதிமூலம் என்பவரின் மகனுமாவார். குறைந்த வயது. இவர் சுதந்திர கட்சி பின் நாளில் கலைக்கப்பட்ட பின் திமுகவில் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்

1971தேர்தல் முடிவுகள்

கருணாநிதி அவர்கள் சென்ற இடமெல்லாம் தன்னுடைய நாவன்மையால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒருவாறாக  தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தது. பாராளுமன்ற தேர்தலில் காமராஜர் மட்டும் வெற்றி பெற்றார்சட்ட மன்ற தேர்தலில் திமுக 184 தொகுதி களையும் இந்திரா காங்கிரஸ் திமுக கூட்டணி 205 இடங்களையும் கைப்பற்றியதுசுதந்திரா கட்சி ஆறு இடங்களையும், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பதினைந்து இடங்களிலும் மொத்தம் 21 இடங்களை கைப்பற்றியது.என்னுடைய சேரன்மகாதேவி தொகுதியில் திரு சிவப்பிரகாசம் 193 ஓட்டில் வெற்றி பெற்றார்திரு கருணாநிதி மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சி அமைத்தார்.

எம்ஜிஆருக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்கு தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர், எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம், படத்தயாரிப்பாளர்களுக்கு லாப தேவன், வறியவர்களுக்கு வள்ளல், தமிழ்நாட்டு பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்ஜிஆர் என்ற மனிதரில் புதைந்து கிடக்கின்றன. 1972 ம் ஆண்டு கலைஞர்  தனது மூத்த மனைவி திருமதி பத்மாவதியின் மகன் மு. . முத்துவை சினிமாவிலும் அரசியலிலும் நுழைத்தார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுத்த பிள்ளையோ பிள்ளை தொடக்க விழாவிற்கு எம்ஜிஆர் வந்தார்.  அவரே கிளாப் அடித்து படத்தை துவக்கினர்.  முத்துவிற்கு வாழ்த்துக்களை கூறினார்.  இடைப்பட்ட காலத்தில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பனிப்போர் தொடக்கி இருந்தது.  ஆனால் இருவருமே அதை பகிரங்கப் படுத்த வில்லை.  படம் முடிந்தது. சிறப்பு காட்சிக்கு எம்ஜிஆர் வந்தார்.  படத்தை பார்க்க பார்க்க உதட் டை கடித்தபடியே யோசித்து கொண்டிருந்தார்.  முகமுத்துவின் நடிப்பில், நடனம், சண்டை காட்சிகள், பாடல்கள்  எல்லாவற்றிலும்  எம்ஜிஆரை: அப்படியே பிரதிபலித்தார். எதோ சதி நடக்கிறது என எம்ஜிஆருக்கு புரிந்து விட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை.  உனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொள் என முத்துவிடம் கூறி விட்டு ஒரு கடிகாரத்தை பரிசளித்து விட்டு கிளம்பினார்.  அது முத்துவுக்கு புரிந்ததோ இல்லையோ கலைஞருக்கு புரிந்தது. 
கிளம்பும் போது வாலி எதிர் பட்டார்.  நாளை காலை தோட்டத்திற்கு வாருங்கள். என்ன ஏது என விசாரிப்பதற்குள் எம்ஜிஆர் கார் பறந்து விட்டது.  மறுநாள் குழப்பத்துடன் வாலி தோட்டத்திற்கு சென்றார். இருவரும் சாப்பிட தொடங்கினார். என்னங்க  வாலி மூன்று தமிழ் தோன்றியது முகமுத்துவிடம்தானோ ஈட்டியாய் கேள்வி  பாய்ந்தது. வாலிக்கு புரிந்து விட்டது.  மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ ........ பாடலைத்தான் கேட்கிறார் என. அண்ணா முத்து வளர வேண்டிய பையன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும் படி கேட்டுக் கொள்ளப் பட்டேன்.  என்னுடைய தமிழ் எல்லோரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என நீங்களே பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். அதனால்தான் அப்படி எழுதினேன்.
பூக்காரி முதல் பிள்ளையோ பிள்ளை என பல படங்களில் நடித்தார். அவரது ஆடை லாங் ஷாட்டில் எம்ஜியாரை  போல இருந்தது. மு.க. முத்து சொந்த குரலில் பாடல்கள் பாடினார். எம்ஜி ஆர் தன்னை அரசியலில் ஓரங்கட்டவே கருணாநிதி தனது மகனை நடிக்க வைக்கிறார் என எண்ணி கட்சியில் ஆர்வத்தை குறைத்து, பொது மேடைகளில் கட்சியை அண்ணாவிற்கு பிறகு அரசியலில் லஞ்சம் மிகுந்து விட்டது  எனவும் கட்சி கணக்கை காட்டுங்கள் எனவும் பேச தொடங்கினர்.  கட்சியின் பொருளாளர் எம்ஜிஆர் தான்.  அவர் தான் கட்சி கணக்கை கட்ட வேண்டும் என கருணாநிதி பேசினார்.   விரிசல் அதிகமாக இறுதியில் கட்சியின் செயற் குழு மாவட்ட செயலாளர்கள் கூடி எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கினார்கள்.

திமுகவிலிருந்து எம்ஜி ஆரை நீக்கிய உடன் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும் துன்பத்திற்கும் உள்ளானார்கள்.  தங்கள் வீட்டில் உள்ள தலைவருக்கு அவமானம் ஏற்பட்டதை போல் உணர்ந்தனர். எம்ஜிஆரும் அண்ணா சமாதி முன்னர் உட்கார்ந்து தியானம் செய்து நீதி கேட்டார்.  தமிழகம் எங்கும் இதை பற்றியே பேச்சு.  எம்ஜிஆர் படம் ஒட்டப்படாமல் சென்ற கார்கள், பஸ்கள் மீது பொது மக்களும் கட்சிக்காரர்களும் கல் எறிந்து தாக்குதல் நடத்தினர்.  மக்கள் எம்ஜிஆரை புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டினார்கள். தமிழ் தினசரி முழுவதும் அவரை பற்றிய செய்திகள் மட்டும் அதிக அளவில். குறிப்பாக தினமலர் நாளேடு எம்ஜிஆருக்கு ஆதரவான நிலை எடுத்து அவரை பற்றிய செய்திகள் அதிக அளவில் வெளியிட்டது.  தினமலர் நாளேடு அந்த சமயத்தில் அதிகஅளவில் விற்பனை ஆனது நன்றாக நினைவிருக்கிறது. வார பத்திரிகைகளும் எம்ஜிஆர் நிலைப்பாட்டை ஆதரித்து எழுதின. திமுக ஆட்சியில் இருந்ததால் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெரும் அளவில் எம்ஜிஆருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.  கட்சி தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் எம்ஜிஆரை ஆதரித்தனர்.

 17.10.1972 ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எம்ஜிஆர்  தொடங்கினர். தொண்டர்கள் பெரும் அளவில் கட்சியில் சேர்ந்தனர்.  மற்ற எதிர் கட்சிகளோடு சேர்ந்து குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளோடு சேர்ந்து கருணாநிதி அரசு மீது ஊழல் புகாரை மத்தியஅரசிடம் அளித்தார். 1973 ம் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தில காமராஜர் காங்கிரஸும் மூன்றாவது இடத்தில திமுகவும் நான்காவது இடத்தில இந்திராகாங்கிரஸும் வந்தன.  அதே ஆண்டு கோயம்பத்தூரில் நடந்த சட்டமன்ற இடை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது.  சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அதிமுகவிற்கு கட்சி மாறி வந்தார்கள்.  1975 ம் ஆண்டு இந்தியாவில் அவசரநிலை பிரகண்டனம் செய்ய பட்டது. கருணாநிதி மிக கடுமையாக அவசரநிலை பிரகண்டனத்தை எதிர்த்தார்.  1976 ம் ஆண்டு இந்திராகாந்தி கருணாநிதி தலைமையிலான ஆட்சியை கலைத்தார்.  தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தது.  பின்னர் ஊழல் புகாருக்கான விசாரணை கமிஷன் அமைத்தார்.  1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக பெருவாரியான இடங்களை பிடித்து 30.06.1977 அன்று எம்ஜிஆர் முதலமைச்சராக பொறுப்பேற்றார.


   

சத்துணவு திட்டம்  என்ற போது  எம்ஜிஆரை  நோக்கிக் கை கூப்பிய  மக்கள்  சாராய பேர  ஊழல் வெடித்த போது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர்.   எம்ஜிஆரின்  மீது சந்தேகத்தின்  நிழல் கூட விழவில்லை.  அதுதான்  எம்ஜிஆர்  என்ற  மந்திர  வார்த்தையின்  பலம்.  எம் ஜி ஆரைப் பற்றி படித்த செய்திகள் பல ஆயிரம். அதனால்தான் ஆயிரத்தில் ஒருவன்.  இல்லை தவறு கோடியில் ஒரு மாமனிதர்.

எம்ஜிஆர் முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து  இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை. மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தைய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தைய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல் நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட எம்ஜிஆர் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார். திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை  அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால், காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் எட்டாவது அதிசயம் எம்ஜியார்.  செருப்பு தைய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்தது மட்டுமில்லை,  நடப்பிலும் வாழ்ந்தார்.    வாழ்க எம்ஜியார் புகழ் .....



காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரில் இருந்து இறங்குபவர் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர்.

எந்தவித முன் அறிவிப்பும் இல்லை. அவர் வருகிறார் எனும் செய்தியும் இல்லை..


மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாக அலை பாய்கின்றனர். காரணம்..? அன்றைய மடாதிபதியான மகா பெரியவர் அந்த சமயம்  மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்க வேண்டுமே..!!

மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்: "ஏனிந்த
பரபரப்பு?"

அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.

மகா பெரியவர் மூன்று கிமீ  தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.

"இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்" பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.


மகா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் நடந்து செல்கிறார் குடிலை நோக்கி.


முதலமைச்சரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,

"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."

"அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதலமைச்சர்!"

என்றபடி அவர்க்கு எதிரே மண்  தரையில் உட்காருகிறார் இதயக்கனி.

இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை,

தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மகா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்ஜிஆர் ஒருவர்!

ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!


"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்பழனி திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா போகவேண்டியிருக்கு அதுக்கு தேக சிரமம், கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.

*ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தால்  ரொம்ப நன்றாக இருக்கும்"*

இவ்வளவு தானே,

இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?  ஒரு போன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
*"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*

"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.

அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு" என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.

*இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!*



*எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்ஜிஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!*


No comments: